சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை : “”சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்படும்,” என, முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, “பட்டியல் இனத்தவர் என இடம் பெற்றுள்ளதற்காக, தேவேந்திர குல வேளாளர்களை, ஆதிதிராவிடர் என அழைப்பதை அவர்கள் விரும்பாததால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயரை சூட்ட வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி பதிலளித்து பேசியதாவது: ஆதிதிராவிட மக்களை, “ஆதிதிராவிடர்கள்’ என்று அழைப்பதா அல்லது வேறு பெயரில் அழைப்பதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதுப்பெயரில் அழைப்பதா என்றெல்லாம் ஒரு பிரச்னை, டில்லியில் எழுந்த போது, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் முடிவுக்கு இப்பிரச்னை விடப்பட்டுள்ளது. இந்த பெயர் பற்றி ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். ஆதிதிராவிடர்களா, பஞ்சமர்களா, பறையர்களா, பள்ளர்களா என்றெல்லாம் பகுத்து கூறுகின்ற நிலைக்கு முன், பெரியாரிடம், “நீங்கள் ஆதிதிராவிடர்களுக்காக உழைப்பதாக கூறுகிறார்களே; நீங்கள் கேட்கிற திராவிட நாடு வந்தால், எங்கள் நிலை என்ன?’ என்று கேட்ட போது, “ஆதி’ என்ற பெயரை நீங்கள் இழக்க நேரிடும்; நீங்களும் திராவிடர்களாகி விடுவீர்கள்’ என்று பெரியார் பதிலளித்தார்.

இப்போதுள்ள சூழ்நிலையில், அந்த மாதிரி கூற நான் விரும்பவில்லை. ஏனெனில், நான் பெரியார் கிடையாது. பெரியார், எதையும் ஆய்ந்து கூறுவார்; துணிந்து கூறுவார். எனவே, நான் அதைக்கூற விரும்பவில்லை. தற்போது எழுந்துள்ள பிரச்னையை பொறுத்தவரை, இனி ஆதிதிராவிடர்கள் என்றோ, தலித் என்றோ அழைக்காமல், “பட்டியல் இனத்து மக்கள்’ என்று அழைத்து விட்டு, அவர்களுடைய வகுப்பை அடைப்புக்குறிக்குள் போட்டு விடலாம் என்று கருதுகிறோம். இந்த கருத்தை, நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ள குழுவிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அக்குழுவின் அறிக்கை விரைவில் வரும். மக்களுடைய மனம் மகிழத்தக்க அளவில், குழுவின் முடிவு இருக்கும் என்று கருதுகிறேன். ராஜிவ் குண்டடிப்பட்ட உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை மருத்துவமனைக்கு, கண்டிப்பாக ராஜிவ் பெயர் வைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *