சென்னை:சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தின் நிதியில் இருந்து நடத்தப்படுகிறதா என அரசு தெரிவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், “2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ் மையத்தில் சி.பி.ஐ., சோதனை நடந்தது. சென்னை சங்கமம் நடத்துவதற்கு தமிழ் மையத்துடன் சேருவது என, தமிழக சுற்றுலாத் துறை முடிவெடுத்துள்ளது. சி.பி.ஐ.,யின் சோதனையில் இருக்கும் ஒரு அமைப்புடன், தமிழக அரசு இணைந்து செயல்படுவது, பொது நலனுக்கு எதிரானது.
தமிழ் மையத்தை விடுவித்து அறிக்கை எதையும் சி.பி.ஐ., தாக்கல் செய்யவில்லை. பொது மக்களின் பணமும், சென்னை சங்கமத்துக்காக செலவிடப்பப்படுகிறது. எனவே, சென்னை சங்கமம் நடத்துவதற்காக தமிழ் மையத்துடன் இணைந்து தமிழக சுற்றுலாத் துறை செயல்பட தடை விதிக்க வேண்டும்’ என கோரியுள்ளார்.இம்மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ நேற்று விசாரித்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன், அரசு சார்பில் அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகினர். “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:அரசு பிளீடர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழ் மையத்தின் நிதியில் இருந்து கலாசார நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா அல்லது நிகழ்ச்சியை மட்டும் தமிழ் மையம் நடத்துகிறதா அல்லது கூட்டு சேர்ந்து நடத்துகிறதா என மனுவில் குறிப்பிட வேண்டும். மனு மீதான விசாரணை 7ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply