சோனியா – மன்மோகன் ஆலோசனை: அமைச்சரவை இன்று மாற்றம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து நேற்று முன்தினம் பேசினார். இதற்கிடையே நேற்று, சோனியா, பிரதமரை சந்தித்து பேசினார். இது அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க நடந்த சந்திப்பு என கூறப்படுகிறது.மத்திய அமைச்சர்கள் சரத்பவார், கபில் சிபல் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. இந்த பொறுப்புகள் புதிதாக பதவி ஏற்க உள்ள அமைச்சர்களுக்கு பிரித்து தரப்பட உள்ளது.தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா பதவி விலகியதால் அவரது பொறுப்பை கபில் சிபல் கூடுதலாக வகிக்கிறார். சசிதரூர், பிருத்வி ராஜ் சவான் ஆகியோர் பதவி விலகியதால் அந்த இலாகாக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.சோனியாவுடன், அவரது அரசியல் செயலர் அகமது பாட்டீலும் பிரதமரை சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில் பழங்குடி விவகாரத் துறை அமைச்சர் காந்திலால் புரியாவும், உருக்குத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்கும், எம்.பி.க்கள் ஜனார்த்தன திவேதி, நவீன் ஜிண்டால் ஆகியோரும் சோனியாவை நேற்று சந்தித்து பேசினர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் நிதி, வெளியுறவுத் துறை, பாதுகாப்பு, உள்துறை ஆகிய இலாகாக்களை வகிப்பதால் இந்த இலாகாவில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது, என உறுதியாக நம்பப்படுகிறது.தனி பொறுப்பு அமைச்சர்களான ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், பிரபுல் பாட்டீல் ஆகியோர் காபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெறுவார்கள், என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சல்மான் குர்ஷித்துக்கு சட்டத்துறையும், சட்டத்துறையை வகிக்கும் வீரப்ப மொய்லி மனித வள மேம்பாட்டுத் துறைக்கும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அமைச்சர் பதவி வகிக்கும் விலாஸ் ராவ் தேஷ்முக், சி.பி.ஜோஷி, பி.கே.ஹன்டிக் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு கட்சி பணியில் ஈடுபடுத்தவும் வாய்ப்பு இருப்பதாக, காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய அமைச்சரவையில், கோவா, மணிப்பூர்,சத்திஸ்கர் மாநிலங்களை சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. எனவே, இந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும், எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ராஜ்யசபா துணை தலைவர் ரஹ்மான்கான், மணிஷ்திவாரி, ராஜீவ் சுக்லா ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் காத்திருப்பதாக கூறப்படுகிறது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதிப் பந்தோபாத்யாய் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார்.அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் முன், சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் மீண்டும் ஒரு முறை சந்தித்து பேசும் வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *