ஜன. 15க்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்-திமுகவுக்கு மீண்டும் கிடைக்குமா தொலைத் தொடர்புத்துறை

posted in: அரசியல் | 0

டெல்லி: ஜனவரி 15ம் தேதிக்குப் பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் திமுகவுக்கு மீண்டும் தொலைத் தொடர்புத்துறை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையிலும், கட்சி அளவிலும் பெருமளவில் மாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. சில அமைச்சர் களிடம் ஏராளமான கூடுதல் பொறுப்புகள் இருப்பதால் அவர்களது சுமைகளைக் குறைக்கும் வகையிலும், சிலரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் அவர்களை நீக்கவும் பிரதமர் யோசித்து வருகிறார். ஜனவரி 15ம் தேதிக்குப் பின்னர் இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்து வந்த ராசா பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தத் துறை தற்போது அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின்போது மீண்டும் திமுகவுக்கு தொலைத் தொடர்புத்துறை தரப்படாது என்று காங்கிரஸ் வட்டாரத்தகவல்கள் கூறுகின்றன. மாறாக முழு நேர தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக சிபலே மாற்றப்படவுள்ளாராம்.

அதேசமயம், திமுகவுக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி தரப்படாது என்றும் செய்திகள் [^] தெரிவிக்கின்றன. இதன் மூலம் திமுகவின் பதவி எண்ணிக்கை ஒன்று குறையவுள்ளது.

சிபலிடம் இருக்கும் மனித வள மேம்பாட்டுத்துறையை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதியிடம் தரத் திட்டமிட்டுள்ளாராம் சோனியா காந்தி [^] .

அம்பிகா சோனி, விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை கட்சிப் பணிக்கு அனுப்பவுள்ளனர்.

இதுவரை இணை அமைச்சராக இருந்து வரும் ஜெயராம் ரமேஷ் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படக் கூடும்.

சசி தரூர் விலகலால் காலியாகவுள்ள வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவிக்கும் புதியவர் நியமிக்கப்படவுள்ளார்.

திட்டக்கமிஷன் துணைத் தலைவராக உள்ள எம்.எஸ்.அலுவாலியா அமைச்சராக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல தேசிய அடையாள அட்டைத் திட்டத் தலைவரான நந்தன் நிலகேனியும் அமைச்சராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *