ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் கூட வேண்டாம், ரயிலிலோ அல்லது காரிலோ கூட போய் அவர் மீனவர் குடும்பங்களைச் சந்திக்கவில்லையே.

இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் புஷ்பவனம் கிராமத்திற்கு ஓடியிருக்கிறார் அவர் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று ஹெலிகாப்டரிலேயே திரும்பி இருக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டு பரிதாபமாக இறந்து இருக்கிறார்கள்.

உதாரணமாக, 1991-96-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். 2001-2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் எந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டு இறந்ததற்காகவாவது ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம்; புகைவண்டியிலோ, காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுண்டா?

அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்துக்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா, வேஷமா? ஆறுதல் கூறப்போன இடத்தில் கூட, தான் ஆட்சிக்கு வர மீனவர்கள் வாக்களிக்க வேண்டுமென்று ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறார்.

நாகை மீனவர் ஜெயக்குமார் மறைந்த செய்தி கேள்வியுற்றதும் அவரது உடல் அடக்கம் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் தரப்பட்டது மட்டுமல்லாது, அவரது மனைவி முருகேஸ்வரிக்கு சத்துணவு உதவி அமைப்பாளர் பதவிக்கான பணி நியமன உத்தரவும் தரப்பட்டது.

ஆனால், அவரது உடல் அடக்கம் எல்லாம் முடிவுற்ற பிறகு தேர்தலை முன்னிட்டு மீனவர்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா இந்தப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு தொழிலாளர்கள் மத்தியில் மேலும் சில கோரிக்கைகள் இருந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று அரசு அலுவலர்களுக்கு சமமான ஊதியமும் பல்வேறு சலுகைகளும் தொழிலாளர்களுக்கு வழங்கிட ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தம் மீது வெறுப்பு கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய சங்கமும், வேறு சில எதிர்க்கட்சிகளின் சார்புடைய சங்கங்களும் இணைந்து கூட்டம் நடத்துவதும், வேலை நிறுத்தம் செய்வதாக அறிவிப்பதும், அவர்களின் வேண்டுகோளை ஏற்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வரும்போது அவர்களைத் தடுப்பதும் என்பதுமான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

அரசின் புதிய சலுகைகள் என்னென்ன வழங்கப்பட்டுள்ளன என்பவை தெரிவிக்கப்பட்ட பிறகும் எதிர்க்கட்சிகளின் சார்புடைய சங்கங்கள் போராட்டம் நடத்துவது எந்த அளவுக்கு உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்பதை மக்களும், தொழிலாளர்களும் புரிந்து கொள்வார்கள்.

சிபிஎம் மாநிலக் குழு தீர்மானம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மானத்தில் தமிழக அரசை கடுமையாகத் தாக்கி தீர்மானங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.

அதன் இறுதியில் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு காண முடிவு செய்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த முடிவைச் செயல்படுத்த தி.மு.க. அரசைத் தாக்கித்தானே தீர்மானம் எழுத வேண்டும்.

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாக பருப்பு வகைகள் கிலோ ரூ.25-க்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தர வேண்டிய கடப்பாடு உடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் அந்தக் கடமையில் இருந்து தவறுகிறார்கள்.

தா.பாண்டியனுக்கு சில கேள்விகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும் போது, இலவசங்கள் என்ற பெயரில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி அதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வரும் தி.மு.க. அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு அரசின் சார்பில் பல முறை பதில் சொல்லியாகி விட்டது. தூங்குகிறவரை எழுப்பலாம், தூங்குவதைப் போல நடிப்பவரை எப்படி எழுப்ப முடியும்? உலகம் முழுவதிலும் அரசுகள் கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதால், நிதிப் பற்றாக்குறை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறை பெரும்பாலும் கடன் திரட்டுவதன் மூலம் ஈடு செய்யப்படுகிறது.

அரசின் சொந்த நிதி ஆதாரங்கள் தேவையான அளவுக்குப் பெருகும் வரை மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல் ஒத்திப் போட இயலாது. மேலும் போதுமான சொந்த நிதி ஆதாரங்களை எதிர்நோக்கி அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தாமல் காத்திருந்து, நிதி ஆதாரம் கிடைத்து அத்திட்டத்தினை செயல்படுத்தும் போது செலவினம் பல மடங்கு உயர்ந்து விடும்.

இதனைக் காட்டிலும் கடன் பெற்று அப்பணியினை முன்னதாகவே செய்து முடிப்பதன் மூலம் செலவினம் குறையும். எனவே எல்லா அரசுகளும் நிதிப் பற்றாக் குறையை ஈடுசெய்வதற்கு கடன் திரட்டும் முறையை கையாளுகின்றன. அமெரிக்க நாட்டின் கடன் பொறுப்பு 12 லட்சத்து 67 ஆயிரம் கோடி டாலர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009 2010 ம் ஆண்டு இறுதியில் 89,149 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டும்தான் கடன்களை வைத்துள்ளதா? 31 3 2010 அன்று நம்முடைய அண்டை மாநிலங்கள் எவ்வளவு கடன் வைத்துள்ளன என்று பார்த்தால், மராட்டிய மாநிலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடி ரூபாய் கடனையும் ஆந்திரப்பிரதேச மாநிலம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடி ரூபாய் கடனையும் கர்நாடக மாநிலம் 79 ஆயிரத்து 644 கோடி ரூபாய் கடனையும் மிகச் சிறிய மாநிலமான கேரளா 70 ஆயிரத்து 761 கோடி ரூபாய் கடனையும் ஏன், இந்தியா 35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடி ரூபாய் கடன்களையும் வைத்துள்ளன.

தனி நபர் கடன் என்று எடுத்துக் கொண்டால் தென்னக மாநிலங்களிலேயே; ஏன் கேரளாவை விடக் குறைவாகத்தான் தமிழ்நாடு உள்ளது. புள்ளி விவரங்களோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருக்குச் சொல்ல வேண்டுமேயானால் மராட்டிய மாநிலத்தில் தனி நபர் கடன் 18 ஆயிரத்து 576 ரூபாய் ஆந்திரப்பிரதேசத்தில் தனி நபர் கடன் 14 ஆயிரத்து 494 ரூபாய் கர்நாடக மாநிலத்தில் தனி நபர் கடன் 15 ஆயிரத்து 103 ரூபாய் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவில் தனி நபர் கடன் 21 ஆயிரத்து 991 ரூபாய் தமிழ்நாட்டில் இந்த மாநிலங்களையெல்லாம் விட குறைவாக 14 ஆயிரத்து 353 ரூபாய் தான்.

எனவே இலவசங்களைக் கொடுப்பதால் தான் தமிழ்நாட்டில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் என்பது எவ்வளவு தவறான வாதம் என்பது தெளிவாகிறதா இல்லையா?

ஓர் அரசின் மொத்தக் கடன் எவ்வளவு என்பதை விட, அந்த அரசுக்கு தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என்பது தான் முக்கியம். இதற்கு அரசுகள் வாங்கும் கடன், அந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் தொகை எவ்வளவு விழுக்காடு என்பதை பொறுத்தே அமையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் 2009 2010 ம் ஆண்டின் இறுதியில் உள்ள மொத்தக் கடன் 89 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதமாகும்.

மத்திய அரசு மாநிலங்கள் எந்த அளவிற்குக் கடன் வாங்கலாம் என்பதை நிர்ணயம் செய்கின்றது. மாநில அரசுகளின் மொத்தக் கடன் அளவு அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதத்திற்கு கூடுதலாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடன் இந்த அளவிற்குள் தான் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தா.பாண்டியன் சார்ந்துள்ள பொதுவுடைமை கட்சிகள் ஆட்சி செய்கின்ற மேற்கு வங்கத்தில் 2009 2010 ம் ஆண்டு நிலவரப்படி உள்ள மொத்தக் கடன் 1 லட்சத்து 68 ஆயிரத்து 684 கோடி ரூபாயாகும். இது அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 43.31 சதவிகிதமாகும்.

இந்த ஆண்டு கூட மேற்கு வங்க அரசு வாங்கியுள்ள கடன் தொகை 16 ஆயிரத்து 260 கோடி ரூபாய். தமிழ்நாடு பெற்ற கடன் 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய். இதிலிருந்து எந்த மாநில அரசு கடன் சுமையை மக்கள் தலையிலே ஏற்றி உள்ளது என்பதை பாண்டியன் நடுநிலையோடு கூறுவாரா?

அதேபோல மார்க்சிஸ்ட்கள் ஆளும் கேரளாவில் 2009-2010 ம் ஆண்டு நிலவரப்படி மொத்தக் கடன் 70 ஆயிரத்து 761 கோடி ரூபாயாகும். இது அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 31.62 சதவிகிதமாகும்.

தி.மு.க. அரசு 2006 ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இலவசங்களை வழங்கியதால்தான் தா.பாண்டியன் கூறியிருப்பதைப் போல 91 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கடன் வந்து விட்டதா? இவர்களின் ஜெயலலிதா அம்மையார் ஆட்சி செய்தபோது கழக அரசு வழங்கிய இலவசங்களை யெல்லாம் நிறுத்திவிட்டாரே, அந்தக் காலத்தில் தமிழக அரசு கடனே இல்லாமல் இருந்ததா?

2001 2002ஆம் ஆண்டில் எனது தலைமையிலான அரசு விட்டுச் சென்ற கடன் 32 ஆயிரம் கோடி ரூபாய். அந்தக் கடன் 2005 2006ஆம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க. ஆட்சி பதவியில் இருந்து நீங்குகின்ற காலக் கட்டத்தில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் எல்லாம் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா? அதற்குப் பிறகும் அந்தக் கட்சியோடு கூட்டணி சேர தா.பாண்டியன் சென்றிருப்பது எந்த அடிப்படையிலே நியாயம்? நியாயத்தைப் பாண்டியனிடம் கேட்க முடியுமா? என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *