டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி

டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.

இந்தியப் பந்து வீச்சாளர்கள், தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டத் தவறியதும், இந்திய மட்டையாளர்கள், ரன் குவிக்கத் தவறியதாலும், நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விட்டது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும் கூட அம்லா அபாரமாக ஆடி அரை சதம் போட்டு அணியை வலுப்படுத்தினார். அதிரடியாக ஆடிய அம்லா, 36 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.

பின்னர் வந்த டிவில்லியர்ஸும், டுமினியும், இந்தியப் பந்து வீச்சை நிலை குலைய வைத்து ரன்களைக் குவித்தனர். டுமினி 73 ரன்களையும், டிவில்லியர்ஸ் 76 ரனக்ளையும் குவித்தனர். இந்த மூன்று வீரர்களின் பிரமாதமான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களைக் குவித்து விட்டது.

இந்தியப் பந்து வீச்சு நேற்று பிரமாதமாக இல்லை என்றே கூற வேண்டும். இந்தியத் தரப்பில் நேற்று 7 பேர் பந்து வீசினர். இருந்தும், தென் ஆப்பிரிக்காவின் ரன் குவிப்பை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஜாகிர்கான், முனாப் படேல், ரோஹித் சர்மா தலா 2 விக்கெட்களையும், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். யுவராஜ் சிங்குக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.

மிகக் கடினமான இலக்குடன் இந்தியா தனது பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டெயின் போட்ட அபாரமான முதல் ஓவரில், முரளி விஜய் காலியானார். ஓவரின் 4வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

பிறகு 4வது ஓவரில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்கவே அணி தள்ளாட ஆரம்பித்தது. அந்த தள்ளாட்டம் கடைசி வரை நீடித்தது.

அதன் பின்னர் 11வது ஓவரில் 2 விக்கெட்களை விழ்த்தினார் மார்க்கல். முதலில் ரோஹித் சர்மாவை வீழ்த்தினார். பின்னர் யுவராஜ் சிங் அவுட்டானார்.

முதல் 15 ஓவர்களில் இரண்டு பவுண்டரிகளை மட்டுமே இந்தியாவால் விளாச முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் வந்த டோணி நிலைமையை சமாளிக்க கடுமையாக முயன்றார். அவரும், விராத் கோலியும் சிறுகச் சிறுக ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால் நிலைமை சற்று மேம்பட்டது. 22வது ஓவரில் கோலி, அடுத்தடுத்து ஒரு சிக்சரையும், ஒரு பவுண்டரியையும் விளாச இந்திய ரசிகர்கள் சற்று உற்சாகமடைந்தனர்.

இதைப் பார்த்து டோணியும் அடித்து ஆட ஆரம்பித்தார். 22வது ஓவரில் மட்டும் இந்தியா 15 ரன்களைச் சேர்த்தது. ஆனால் மறுபடியும் துரதிர்ஷ்டம் இந்தியாவைத் துரத்தியது. டோணி ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 25.

மறுபக்கம் விராத் கோலி தொடர்ந்து நிலைத்து ஆடி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டோணியும், கோலியும் இணைந்து 52 ரன்களைச் சேர்த்தனர்.

இந்தியத் தரப்பில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இவர் எடுத்த ரன்கள் 32.

இப்படியாக தட்டுத் தடுமாறிய இந்தியா இறுதியில், 35.4 ஓவர்களில் 154 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் சோத்சோபே 4 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்டெயின், மார்னி மார்க்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *