சென்னை: தமிழகத்தில் 6 போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆங்காங்கு வன்முறை வெடித்துள்ளது.
25 இடங்களில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட 6 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை, வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1.40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.2,500 முதல் ரூ.8,000 வரை அதிகம் கிடைக்கும் என அரசு அறிவித்தது.
ஆனால் இது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக தொழிற்சங்கம், இடதுசாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை அதிருப்தி தெரிவித்துள்ளன. இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கூறுகையில், இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. எனவே, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி பிரதான தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி., தே.மு.தி.க. கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட 6 சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஜனவரி 26-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 27-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக் தொடங்கியது. 6 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவித்திருந்தபோதிலும் திமுகவின் தொமுச தொழிற்சங்கத்தினர் முழு வீச்சில் பஸ்களை ஓட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் பஸ் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் டெப்போக்களில் உள்ள 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
25 இடங்களில் கல்வீச்சு:
ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல் பஸ்களை ஓட்டியவர்கள் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். சென்னையில் திருவொற்றியூரில் 4, எண்ணூரில் 2, ஆவடியில் 4 பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல கன்னியாகுமரி உள்பட தமிழகத்தில் 25 இடங்களில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் 2 பேரைப் பிடித்துள்ளனர்.
இந்த ஸ்டிரைக் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,
சட்ட விரோதமாக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பஸ்களும் இயக்கப்படும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் தலைவர்களை தவிர, மற்ற தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வருவதாக கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் படி, ரூ.2,500 முதல் ரூ.8,000 வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். சில தொழிலாளர்களுக்கு மின் ஊழியருக்கு இணையான சம்பளம் கிடைக்கும் என்றார்.
ஸ்டிரைக்கைத் தொடர்ந்து டெப்போக்கள் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் பஸ்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply