தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 163கோடி கூடுதல் சலுகைகள்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ரூ. 163 கோடி கூடுதல் சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆறாவது ஊதியக் குழு மற்றும் அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நியமித்த ஒரு நபர் குழு ஆகியவற்றின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்திட வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன.

தமிழக ஆசிரியர் சமுதாயத்தின்பால் கொண்டுள்ள மிகுந்த பரிவின் காரணமாக ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் சலுகைகளை வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டார்.

தற்பொழுது சாதாரண நிலையில் தர ஊதியம் (கிரேடு பே) ரூ.2 ஆயிரத்து 800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்புப் படி 500 ரூபாய் என்பது 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால் இவர்கள் மாதம் ஒன்றுக்கு தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.1,088 பெறுவார்கள். மேலும், இத்தனி ஊதியம் வரும் காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும் கணக்கில் கொள்ளப்படும்.

ரூ.4 ஆயிரத்து 300 மற்றும் ரூ.4 ஆயிரத்து 500 தர ஊதியமாக பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான ரூ.500 தொடர்ந்து பெறுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் ரூ.200 கூடுதலாகப் பெறுவார்கள். அதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் ரூ.4 ஆயிரத்து 400 என்பது ரூ.4 ஆயிரத்து 600 ரூபாய் என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் ரூ.4 ஆயிரத்து 600 என்பது ரூ.4 ஆயிரத்து 800 ரூபாய் என்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் ரூ.4 ஆயிரத்து 300 என்பது ரூ.4 ஆயிரத்து 500 என்றும், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் ரூ.4 ஆயிரத்து 500 என்பது ரூ.4 ஆயிரத்து 700 என்றும் உயர்த்தி வழங்கப்படும்.

ரூ.4 ஆயிரத்து 600 தர ஊதியமாகப் பெற்றுவரும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப் படியான 500 ரூபாய்க்குப் பதிலாக மாதம் ஒன்று ரூ.750 தனி ஊதியமாகப் பெறுவார்கள்.

இதனால் இவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.1,088 கூடுதலாகக் கிடைக்கும்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் ரூ.5 ஆயிரத்து 400-க்குப் பதிலாக ரூ.5 ஆயிரத்து 700 பெறுவார்கள். இதனால் இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.435 கூடுதலாகக் கிடைக்கும்.

தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் 1.1.2011 முதல் நடைமுறைக்கு வரும். மேற்கூறிய சலுகைகளினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ரூ.163 கோடி தொடர் செலவினம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஏறத்தாழ 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *