சென்னை: பொங்கலுக்குப் பின் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும், கூட்டணியில் பாமகவும் இணையலாம் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதையொட்டி திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: காலையில் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளால் ஒரே பிரச்சனைகளாக இருந்ததே?
பதில்: ஒரே பிரச்சனை தானே, ஒரே பிரச்சனை- ஒரேயொரு பிரச்சனை- ஆளுநர் உரை.
கேள்வி: ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் என்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்: எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் சொல்வார்கள்.
கேள்வி: சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில், ராசா மீதான வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம், அதற்கு சிபிஐ ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே?
பதில்: இது ஒரு செய்தி, அவ்வளவே!
கேள்வி: ராசா மீது சுப்பிரமணிய சாமி தொடுத்துள்ள வழக்கு பற்றி உங்கள் கருத்து?
பதில்: அதிலே என் கருத்து ஒன்றுமில்லை. நீதிமன்ற விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன்.
கேள்வி: திமுகவில் ராசா தொடர்ந்து நீடிப்பது சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?
பதில்: அதைப் பெரிய நெருக்கடியாக நான் கருதவில்லை. இதிலே என் கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். குற்றம் ராசா மீது நிரூபிக்கப்படுகின்ற கட்டத்தில், நிரூபிக்கப்பட்டால், அப்போது கட்சியின் செயற்குழு கூடி, அது பற்றி விவாதித்து நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: அதே போல மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கட்சியிலிருந்து விலகுவதாக உங்களிடம் கடிதம் கொடுத்து விட்டதாக ஒரு செய்தி உள்ளதே?
பதில்: செய்திகள் எல்லாம்- செய்திகளாகவே இருக்கின்றன.
கேள்வி: அழகரி கடிதம் கொடுத்திருக்கிறாரா?
பதில்: இல்லை, கொடுக்கவில்லை.
கேள்வி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திமுகவை எதிர்த்து இந்த தேர்தலில் ஒரு போர் நடக்கும் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: போரா? அல்லது “போரா?” (சலிப்பு) (சொல்லிவிட்டு பலமாக சிரித்தார் முதல்வர்)
கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை தேர்தலிலே பூதாகாரமாக மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வதைப் பற்றி?
பதில்: நீங்களே பூதாகாரமாக என்று சொல்லிவிட்டீர்கள். அதாவது சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்துவதாக இருக்கிறார்கள். செய்யட்டும். அதற்கு ஏற்கனவே பிரதமர் உள்பட எல்லோரும் பதில் சொல்லியாகிவிட்டது. குறிப்பாக மத்திய அமைச்சர் கபில் சிபல் அதைப் பற்றி விவரமாகச் சொல்லியிருக்கிறார். நான் எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: திமுக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கின்ற இந்த நேரத்தில் பிரதமர் கூட்டணி உறுதியாக உள்ளது என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: அது தான் உண்மை. அதைத்தான் தொடர்ந்து பிரதமரும், சோனியா காந்தி அவர்களும் சொல்லி வருகிறார்கள்.
கேள்வி: தேர்தல் தொடர்பாக உங்கள் கூட்டணியின் பேச்சுவார்த்தை எப்போது?
பதில்: பொங்கல் விழா முடிந்த பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும்.
கேள்வி: தேதி குறிக்கப்பட்டு விட்டதா?
பதில்: பொங்கலுக்கு தேதி என்ன?
கேள்வி: மற்ற கட்சிகளோடு நீங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களா? பாமக போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வர சமிக்ஞைகளைக் கொடுத்திருக்கிறார்கள். எப்போது அந்த கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போகிறீர்கள்?
பதில்: அவர்களும் எங்களுக்கு ‘சமிக்ஞை’ கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ‘சமிக்ஞை’ கொடுத்திருக்கிறோம். ஆனால் எப்போது பேசப் போகிறோம் என்பதற்கு தேதி இன்னும் நிர்ணயிக்கவில்லை.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
Leave a Reply