திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஹோலி கிராஸ் கல்லூரியும் ஒன்று. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வந்தது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையொட்டி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த 18- ம் தேதி கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் விடுதி மாணவிகள் 300 பேர் மற்றும் ரெகுலர் மாணவிகள் 200 பேர் அன்றைய தினம் வரவில்லை என்று கூறப்படுகின்றது. ஜனவரி 19-ம் தேதி தான் பெரும்பாலான மாணவிகள் வந்ததாகவும், அதில் சிலர் உடம்பு சரியில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.
மாணவிகளின் காரணங்களை நம்பாத கல்லூரி நிர்வாகம் 18-ம் தேதி கல்லூரிக்கு வராத 500 மாணவிகளையும் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்தோடு, ரூ 1000 அபராதமும் விதித்துள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கல்லூரி முதல்வர் சற்குணாவோ அபராதம் எல்லாம் விதிக்கவில்லை, வரும் 24-ம் தேதிக்குள் பெற்றோர்களை அழைத்து வர மட்டும் தான் சொல்லியிருக்கிறோம் என்றார்.
கூண்டோடு 500 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பற்றி அறிந்த திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் நிர்மலா கல்லூரி நிர்வாகத்தினை கண்டித்துள்ளார். மேலும், ஒரு நாள் வராததற்காக 5 நாட்கள் சஸ்பெண்ட் கூடாது. உடனே மாணவிகளை கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply