சென்னை : “”தி.மு.க., ஆட்சி போவது நிச்சயம்; அ.தி.மு.க., ஆட்சி வருவது நிச்சயம். இது காலத்தின் கட்டாயம்,” என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.
எம்.ஜி.ஆரின் 94வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆரின் சிலைக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறந்த நாள் விழா சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட, திண்டுக்கல் மாவட்டச் செயலர் நத்தம் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார். சேலம், சவுடேஸ்வரி கல்லூரி மாணவர் சூர்யா, மதுரை கேப்ரன் ஹால் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா, தஞ்சாவூர் பாரத் கல்லூரி மாணவர் துரைராஜ் ஆகியோருக்கு ஜெயலலிதா கம்ப்யூட்டர் வழங்கினார்.வடசென்னை மாவட்டம் துறைமுகத்தைச் சேர்ந்த விஜயா, தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையைச் சேர்ந்த மாலா, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமா ஆகியோருக்கு தையல் மிஷின்களை ஜெயலலிதா வழங்கினார்; சலவைப் பெட்டிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை மூன்று முறை அவதாரப் புருஷரான தூய சக்தி எம்.ஜி.ஆர்., மீட்டெடுத்தார். பின், மீண்டும் தமிழகம் கருணாநிதியிடம் சிக்கிக் கொண்டது. உங்கள் துணையோடு நானும், இரண்டு முறை தமிழகத்தை மீட்டெடுத்தேன். ஆனால், மீண்டும் துரதிருஷ்டவசமாக 2006ம் ஆண்டு சிக்கிக் கொண்டது.விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார தட்டுப்பாடு, சட்டம் – ஒழுங்கு சீரழிவு போன்ற, எத்தனையோ பிரச்னைகளால் தமிழக மக்கள் துயரத்துடன் இருக்கின்றனர்; தமிழக மக்கள் சுரண்டப்படுகின்றனர். கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை போன்றவை நடைபெறுகின்றன.பட்டப்பகலில் கொலைகள், கொள்ளைகள் நடைபெறுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை.
ஆகவே, மீண்டும் தமிழகத்தை மீட்டெடுத்து, தூய சக்தியான எம்.ஜி.ஆரின் ஆட்சி அமைக்க வேண்டியது நம் கடமை.அடுத்த சில மாதங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறும் போது கருணாநிதியின் ஆட்சி போவது நிச்சயம்; நம் ஆட்சி வருவது நிச்சயம். இது காலத்தின் கட்டாயம். இதை யாராலும் மாற்ற முடியாது. கட்சிப் பணியில் நீங்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்; வெற்றிக்கனியை பறிக்கத் தயாராக வேண்டும். எம்.ஜி.ஆர்., ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் வரை நமக்கு உறக்கம் இல்லை.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
சென்னை ராமாவரம் தோட்டம், எம்.ஜி.ஆர்., இல்லத்தில் உள்ள வாய் பேசாதோர், காது கேளாதோர் பள்ளியில் படிக்கும் 256 மாணவ, மாணவியருக்கு, தென்சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவையின் இணைச் செயலர் வைத்தியநாதன் தலைமையில் சீருடை, அறுசுவை உணவு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply