கோவை : “தி.மு.க., ஆட்சி மே மாதத்துடன் முடிந்து விடும். மே மாதத்துக்குப் பின், அமையும் அ.தி.மு.க., அரசு தி.மு.க., ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும்’ என, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன்
எச்சரிக்கை விடுத்தார்.
மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க.,சார்பில் நேற்று கோவை செஞ்சிலுவை சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் மலரவன் முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க.,தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் தலைமை வகித்து பேசியதாவது: இலவசங்களைக் கொடுத்து தி.மு.க., மக்களை வளைக்கப் பார்க்கிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் கோட்டை. தி.மு.க., இங்கு எப்போதும் தலைகாட்ட முடியாது. தி.மு.க.,வை தோற்கடிக்க, உயிரை கொடுத்தேனும் தொண்டர்கள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு சேர்க்க வேண்டும்.தி.மு.க., ஆட்சி மே மாதத்துடன் முடிந்து விடும். மே மாதத்துக்கு பின் அமையும் அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சி மட்டுமல்லாது அரசு துறைகளில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு.
வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், கோவை மாநகராட்சி குப்பைக்கும் வரி போட்டுள்ளது. வெட்கக்கேடான இச்செயலால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆனாலும், மின்தட்டுப்பாட்டை நீக்க அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, செங்கோட்டையன் பேசினார்
கோவை புறநகர் மாவட்ட செயலாளர் வேலுமணி பேசும்போது, “கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி மாநாடு ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்றார்.அ.தி.மு.க., தொழிற்சங்க செயலாளர் சின்னச்சாமி, முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி, பொள்ளாச்சி எம்.பி., சுகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், பிரேமா மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply