சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களில் மிக முக்கிய தலைவராக போற்றப்படுவர் வ.உ.சிதம்பரனார். சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு போட்டியாக கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்து, கப்பலை ஓட்டி காட்டியவர்.இந்த கப்பல் நிறுவனத்தை நடத்துவதற்காக, தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வாடியவர். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக, ஆங்கிலேயர்களால் சிறையில் தள்ளி வாட்டி வதைக்கப்பட்டார்.
சிறையில் செக்கிழுத்து கொடுமைப்படுத்தப்பட்டார்.அந்த வகையில் இவர் செக்கிழுத்த செம்மல் என்றும் போற்றப்படுகிறார். இத்தகைய போற்றுதலுக்கு உரிய தலைவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு சூட்ட வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வந்தது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்பு கழகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த தகவலை, நேற்று டில்லி நிருபர்களிடம் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
Leave a Reply