மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தொழிற்கல்வியை மதிப்பிடுவதற்கான அவசியம் மற்றும் அடிப்படை கோட்பாட்டிற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.
தலைநகர் டெல்லியில் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல், இணையமைச்சர் புரந்தேஸ்வரி, 17 மாநில அமைச்சர்கள், மாநில அரசின் செயலர்கள், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., ஐ.ஜி.என்.ஓ.யு., என்.சி.இ.ஆர்.டி., என்.யு.இ.பி.ஏ., சி.பி.எஸ்.இ. மற்றும் என்.ஐ.ஓ.எஸ். போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில், தொழிற்கல்வியை மதிப்பிடுவதற்கான அவசியம் மற்றும் அடிப்படை கோட்பாட்டிற்கான தேவை பற்றி வலியுறுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கான தேவை, தொழில்நுட்பம் மற்றும் புள்ளியியல் மாற்றங்கள், உலகளாவிய மனிதவள திறன் பற்றாக்குறை, தேவைப்படும் ஆற்றல் ஆதாரங்களை ஈடுசெய்ய முடியாமை போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
“தேசிய தொழிற்கல்வி தகுதி விதிமுறை(நேஷனல் வொகேஷனல் எஜுகேஷன் குவாலிபிகேஷன் பிரேம்வொர்க்)” விஷயத்தில் அனைத்து பிரதிநிதிகளின் கருத்தும் ஒன்றுபட்டன. இந்த விதிமுறையானது, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதி அமைப்பிற்கு, பொது கோட்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் உருவாக்கும். இது பள்ளிகள், தொழில்பயிற்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை (அதாவது, உயர்நிலை கல்வி முதல் முனைவர் பட்ட படிப்பு வரை) உள்ளடக்கி இருக்கும்.
அந்த விதிமுறை, பாராட்டுதல்கள் மற்றும் மாற்றங்களுக்கான ஒரு ஏற்பாட்டைக் கொண்ட, ஆற்றல் அடிப்படையிலான பகுதிகளைக் கொண்ட அணுகலாகும். இதனால் மாணவர்கள் பலவித சேர்க்கை சலுகைகளையும், வெளியேறும் வாய்ப்புகளையும் பெறுவார்கள். இதன்மூலம் படைப்புத்திறன் உள்ள மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
தர மதிப்பீடுகள், ஆற்றல்கள், மாதிரி பாடத்திட்டங்கள், அளவீட்டு மதிப்பீடுகள் மற்றும் சோதனை செயல்முறைகளில் ஒவ்வொரு பகுதிகளிலுள்ள திறன் கவுன்சில்களும், தொழிற்சாலைகளும் இணைந்து செயல்படவும், கல்வி வழங்குபவர்களுக்கும், வேலை வழங்குபவர்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பிற்கும் வலியுறுத்தப்பட்டது. மேல்நிலை கல்வி நிலையில் மத்திய அரசின் உதவியால் நடத்தப்படும் தொழிற்கல்வி திட்டம், இந்த முயற்சிகளுடன் இணைந்து செல்லும்.
தொழிற்கல்வியின் அனைத்து நிலைகளின் செயல்பாட்டையும் ஆராய்ந்து ஆலோசனை கூறி, அதை மேம்படுத்தி வலுப்படுத்த, பல மாநிலங்களின் அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்து செயல்படவும் இம்மாநாட்டில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இம்மாநாட்டில் பேசிய கபில் சிபல், “நாடு இரட்டை இலக்க வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில், வரும் 2022 ஆம் ஆண்டில் நமக்கு 20 கோடி பட்டதாரிகளும், 50 கோடி தொழில்திறன் மிக்க நபர்களும் தேவை. செயல்முறைகளை தரப்படுத்தும் செயலானது, கடந்தகால விஷயங்களை நினைவில் வைக்கவும், நிகழ்காலத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டவும், எதிர்காலத்திற்கு சக்தி அளிக்கவும் அவசியம். கல்வி நிறுவனங்கள் அதன் வளாகங்களை, பணி நேரம் முடிந்த பின்னர் ஆற்றல் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும்” என்றார்.
Leave a Reply