புதுடில்லி : கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவுக்கும், தொழிலதிபர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலருடன் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் தலைவரும், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியுமான நிரா ராடிய பேசிய பேச்சுக்கள் அடங்கிய 5,800 டேப் பதிவுகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கோரி, பொதுநல அமைப்பு ஒன்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு துறைகள் உட்பட பல துறைகளில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தும் அந்த டேப் பதிவுகளை வெளியிடுவது பொதுநலனுக்கு உகந்ததே. அத்துடன் ஊழல் பற்றிய ரகசியங்களை தெரிவிப்போருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கும், நிரா ராடியாவுக்கும் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் மீடியாக்களில் வெளியானதால், எரிச்சல் அடைந்த ரத்தன் டாடா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது தொடர்பாக வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் அந்தரங்க உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கோரியிருந்தார். அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனுடன் சேர்த்து தற்போதைய மனுவும் விசாரிக்கப்படும். நிரா ராடியாவுக்கும், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் பாதுகாப்பில் உள்ளன. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணைக்கு உதவும் என்பதால், அது சுப்ரீம் கோர்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply