பணப் புழக்கத்தைத் தடுக்க தேர்தல் கமிஷன் உறுதி: சட்டசபை தேர்தலுக்கு பலத்த கெடுபிடி

posted in: அரசியல் | 0

சென்னை :””பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப்படும்.

சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர, இதர அடையாள ஆவணங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது,” என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான போதிலும், பட்டியலில் தொடர்ந்து பெயர் சேர்க்கப்படும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரை பெறப்படும், விண்ணப்பங்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்கு பத்து நாட்கள் முன் வரை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். சிலர் அடையாள அட்டைகளை தொலைத்துள்ளனர். அவர்கள் விண்ணப்பித்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.தற்போது, தமிழகத்தில், 99.88 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற அடையாள ஆவணங்களை காண்பித்து ஓட்டுப் போட வேண்டிய அவசியம், வரும் தேர்தலில் இருக்காது.தேர்தலில், பண பலம், ஆட்பலம் போன்றவற்றை தடுக்க, பீகார் தேர்தலின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்.

இதுதவிர, புதிய வழிமுறைகளையும், இன்னும், 15 நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் வெளியிடும். ஒவ்வொரு வேட்பாளரும், வங்கிக் கணக்கை துவக்கி, அதன் மூலம் தான் அனைத்து செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படும்.பினாமி மூலம் செலவுகள் செய்தாலும், வங்கி பரிமாற்ற முறைகள் கண்காணிக்கப்பட்டு, அவ்வாறு தேர்தலுக்காக செய்யப்படும் செலவுகள், அந்தந்த வேட்பாளரது கணக்கில் சேர்க்கப்படும். கட்சி செய்யும் செலவுகளும், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.கடந்த முறை சட்டசபை தேர்தலுக்கான பொதுத் தேர்தல் மார்ச் முதல் தேதி அறிவிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால், அனைத்துக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

ஓட்டுப் போட்டதும், அவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டனர் என்பதற்கான அத்தாட்சி ரசீது பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு செய்தால், ஓட்டுரிமையின் ரகசியம் வெளியாகிவிடும்.எனவே, இவ்விஷயத்தில் எந்த மாதிரியான ஆவணங்கள் வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, புதிய கருவியை கண்டுபிடித்தல் போன்றவை குறித்து பரிந்துரைக்க, ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுனர் குழுவின் அறிக்கை வந்த பின், இதுபற்றி முடிவு செய்யப்படும்.

இடைத்தேர்தல் போல, பொதுத் தேர்தலின் போது அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை, இணையதளம் மூலம் பெறுவது கடினமானது. எனவே, பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் மட்டும் இந்த கண்காணிப்பு முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.அப்போது, இணை தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

“பட்டதாரி தொகுதியில் போட்டியிடபட்டதாரி தேவையில்லை’ :மேலவை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவித்த பின் தான், அடுத்த கட்ட நடவடிக்கைகளை துவக்க முடியும். பட்டதாரி தொகுதிகளில் போட்டியிட, பட்டதாரிகளாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள எவரும், பட்டதாரி தொகுதிகளில் போட்டியிடலாம்.சென்னை அயனாவரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தை பொறுத்தவரை, அந்த கூடத்தை நடத்துவதற்கான டெண்டர் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வித திருமணமும் நடத்த முன்பதிவு செய்யப்படவில்லை. எனவே, அங்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்கு தான் அந்த இடம் தேவைப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *