பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்: டெல்லி வரை அதிர்ந்தது

posted in: உலகம் | 0

பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணியளவில் தல்பாந்தின் நகரிலும்,அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

அப்போது நள்ளிரவை கடந்து அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். படுக்கைகளில் இருந்து அவர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதனால், பயந்த மக்கள் திடுக்கிட்டு விழித்து எழுந்தனர். நிலநடுக்கம் என்பதை உணர்ந்த அவர்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் கூடினார்கள்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பீதியில் உறைந்த மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது விடிய விடிய ரோட்டில் தங்கி இருந்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஈரான் நகரை மையமாக வைத்து இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் உயிர்சேதம் போன்றவை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே இந்த நில நிடுக்கம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் மாகாணங்களில் உணரப்பட்டது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. இங்கு அதிகாலை 4.43 மணிய ளவில் பூமி அதிர்ந்து குலுங்கியது. இதனால் சேதங்கள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்பட வில்லை. இங்கு 4.3 ரிக்டல் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியை தவிர அதை சுற்றியுள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டா, அரியானாவில் உள்ள ருர்கான் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. வளைகுடா நாடுகளான அபுதாபி, துபாய் போன்ற நாடுகளிலும் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. அங்கும் பூமி லேசாக அதிர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *