பாடப் புத்தகங்களில் முதல்வர் படம், கட்டுரை இடம்பெற தடை

posted in: மற்றவை | 0

“புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் பள்ளி பாடப் புத்தகங்களில், முதல்வர் உள்ளிட்டவர்களின் படங்களோ, கட்டுரைகளோ இடம்பெறக் கூடாது’ என, பாடநூல் கழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகியுள்ளது. மீதமுள்ள வகுப்புகளுக்கு, ஜூன் மாதம் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை புதிய பாடத் திட்டங்களை தயாரித்து, அதற்கான, “சிடி’க்களை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.மொத்தம் 197 தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. இதில், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் முக்கிய பாடங்கள் 62 தலைப்புகளிலும், மீதமுள்ள 135 தலைப்புகள், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு உள்ளிட்ட ஆறு சிறுபான்மை மொழிகளில் தயாராகின்றன. நேற்று நிலவரப்படி, சிறுபான்மை மொழி அல்லாத 62 தலைப்புகளில், 59 தலைப்புகளுக்கான, “சிடி’க்கள், பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று, “சிடி’க்கள், வரும் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளன.இதுவரை பெறப்பட்ட புதிய, “சிடி’க்களின் அடிப்படையில், 67 அச்சகங்களில் 5 கோடியே 35 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிட, பாடநூல் கழகம், “ஆர்டர்’ வழங்கியுள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான, “சிடி’க்களை, ஜனவரி 15க்குள் ஒப்படைக்க வேண்டும் என, பாடநூல் கழகம் தெரிவித்தபோதும், இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

எனினும், இவற்றின் கீழ் அச்சிடப்படும் பாடப் புத்தகங்கள் மிகவும் குறைவு என்பதால், 35 நாட்களுக்குள் அனைத்து பாடப் புத்தகங்களையும் அச்சிட்டு முடித்து விடுவோம் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 8 கோடி பாடப் புத்தகங்களையும் ஏப்ரலுக்குள் அச்சிட்டு முடிப்பதற்கு ஏதுவாக, அச்சக அதிபர்களிடம் இருந்து தொடர்ந்து பாடநூல் கழகம் விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

இதற்கிடையே, “புதிய பாடப் புத்தகங்களில் முதல்வர் உள்ளிட்ட யாருடைய புகைப்படங்களோ, அவர்களைப் பற்றிய கட்டுரைகளோ இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டு, பாடநூல் கழகத்திற்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கடிதம் அனுப்பியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, பாடப் புத்தகங்களில் ஆளுங்கட்சியைப் பற்றி படங்களோ, கட்டுரைகளோ இடம்பெற்றால், அது தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *