பிரதமருக்கு வைகோ கண்டன கடிதம்

posted in: அரசியல் | 0

சென்னை : தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.


பிரதமருக்கு, “பேக்ஸ்’ மூலம், வைகோ எழுதிய கடிதம்: தங்களை நான் சந்தித்த போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படுகொலைக்கு உள்ளானது குறித்து கூறினேன். இலங்கை அரசுடன் பேசி இதைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தீர்கள். ஆனால், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மீனவர் ஜெயக்குமார் மற்றும் செந்தில், ராஜேந்திரன் என்ற மீனவர்களும் நமது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர், மீனவர்கள் படகை தாக்கி, வலைகளை அறுத்து, மீனவர்களை கடலில் குதிக்கச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். பயந்து போன ராஜேந்திரனும், செந்திலும் கடலில் குதித்து விட்டனர்.

மீனவர் ஜெயக்குமார் சற்று ஊனமுற்றவர் என்பதாலும், கடல் அலைகளில் நீந்த முடியாது என்பதாலும், படகில் இருந்து கடலில் குதிக்க முடியாமல் தன்னைக் காப்பாற்றமாறு மன்றாடி உள்ளார். ஆனால், இலங்கை கடற்படையினர், ஈவு இரக்கம் இன்றி, ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்திய கடற்படையும், மத்திய அரசும் தமிழக மீனவர்களை காக்கும் கடமையைச் செய்யவில்லை. தாங்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இத்தகைய தாக்குதல் இனி நடக்கக் கூடாது என எச்சரிக்கை செய்யாவிட்டால், தமிழக மீனவர்கள் படுகொலைக்கு மத்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டி வரும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *