புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது.
கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது.
விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிருந்தது.
இலங்கைக்கு இந்தியா ‘இந்திரா’ ரக ராடர்களை வழங்கிய விவகாரம் முன்னரே வெளிச்சத்துக்கு வந்திருந்தது. அந்த ராடர்களை இயக்கியது இந்திய விமானப் படை அதிகாரிகள் தான் என்பதையும் பி.ரி.ஐ. உறுதி செய்துள்ளது.
இவர்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும், இலங்கைப் படைகளின் தளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறியுள்ளது.
வவுனியா விமானப்படைத் தளம் மீது புலிகளின் கொமாண்டோ அணி தாக்குதல் மேற்கொண்ட போது இந்திய விமானப்படைப் பொறியியலாளர்கள் சிலர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை இந்திய அரசாங்கம் அப்போது உறுதிப்படுத்தவில்லை.
விடுதலைப்புலிகளின் வான்படைப் பலத்தை முறியடிக்கும் நடவடிக்கைக்கு இந்தியா மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது.
அதைவிட ரஷ்யத் தயாரிப்பான விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் இந்தியா வழங்கியது என்ற செய்தி புதியதாகும்.
புலிகளுக்கு எதிரான போரின்போது பெருமளவிலான ‘இக்லா’ வகை ஏவுகணைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இவை விமானங்களைச் சுட்டுவீழ்த்த தரையில் இருந்து ஏவக் கூடியவை.
இதுபற்றி இந்தியா ஒருபோதும் வாய் திறக்கவேயில்லை. இப்போது தான் அது தெரியவந்துள்ளது.
இதைவிட, கடற்புலிகளை முறியடிப்பதற்காக இந்தியா இரண்டு ரோந்துக் கப்பல்களையும் வழங்கியிருந்தது. “சயுரா“, “சாகர“ என்ற பெயர்களில் கடற்படையினரின் பாவனையில் உள்ள இந்தப் போர்க் கப்பல்கள் ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.
அதற்கும் அப்பால் ஆழ்கடலில் விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து தகவல்களை வழங்கும் புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது.
இவை புலிகளுக்கு ஏதிரான போரில் இலங்கைப் படையினர் வெற்றி கொள்வதற்கு மிகவும் முக்கிய காரணங்களாகின.
இவையெல்லாவற்றையும் மறைத்துத் தான் இலங்கை அரசு நாமே தனித்து நின்று போரிட்டு வென்றோம் என்று கூறிவருகிறது.
இந்தியா இதைவிடவும் அதிகமான பங்களிப்பை வழங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால், அதையெல்லாம் வெளிப்படுத்த முடியாத நிலையில் இன்னும் அது இருக்கிறது. காரணம் தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய தேவை இந்தியா அரசுக்கு இருந்தது. உணர்வுபூர்வமான பிரச்சினையாக அது வெடிக்காமல் இருப்பதற்காக இந்தியா பல தகவல்களை வெளியே கசியவிடவில்லை என்பதே உண்மை.
ஆனால், புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அதற்காக காத்திரமான பங்களிப்புகளையும், உதவிகளையும் வழங்கியது.
போர் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் தான் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பற்றிய கதைகள் இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளன.
பல மாதங்களுக்கு முன்னர் நிகின் கோகலே என்ற இந்திய ஊடகவியலாளர் எழுதியிருந்த நூல் ஒன்றில், புலிகளுக்கு எதிரான போருக்காக இந்தியா எம்.ஐ 17 ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியதாகக் கூறியிருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
ஆனால், இப்போது வெளியாகும் தகவல்கள் அதுவும் உண்மையாக இருக்கலாமோ? என்ற சந்தேகத்தை பலரிடமும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.
வாராவாரம் பாகிஸ்தான் அனுப்பி வைத்த மோட்டார் மற்றும் ஆட்டிலறிக் குண்டுகள், சீனா அனுப்பிய ஆயுதங்கள் என்று ஏராளமான சர்வதேச உதவிகளைக் கொண்டு தான் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் வென்றது.
குறிப்பாகப் பாகிஸ்தானில் இருந்து கிடைத்த அபரிமிதமான வெடிபொருட்கள் தான் களத்தில் படைத்தரப்பின் வெற்றியைத் தீர்மானித்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.
இவையெல்லாம் இருந்த காரணத்தினால் தான் படைப்பலத்தைப் பெருக்கி இலங்கை அரசாங்கத்தினால் போரில் வெற்றியீட்ட முடிந்தது. ஆனால், இவையெல்லாவற்றையும் மறைத்து விட்டுத் தனியே போரை நடத்தியதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.
அதேவேளை இந்தியாவைப் பொறுத்த வரை எவ்வளவு உதவிகளைச் செய்தது என்பதை யாராலும் உறுதியாகக் கூறடியாது. ஏனென்றால், அந்த உண்மை வெளிவருவதை தமிழ்நாட்டிலுள்ள பல பிரதான கட்சிகள் விரும்பாது.
அரசியல் நலனுக்காக இந்த விடயத்தை இரகசியமாக மறைத்து வைத்திருக்கவே அவை முற்படும்.
இந்தக் கட்டத்தில் இந்தியாவில் நகைச்சுவை அரசியல்வாதி என்று பெயரெடுத்த சுப்ரமணியம் சுவாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை நகைப்புக்கிடமாக உள்ளது.
2008 – 09 காலப்பகுதியில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு பீரங்கி மற்றும் வான்படை உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா மறுத்ததால், பாகிஸ்தான் அவற்றை வழங்கி அங்கு தளம் அமைக்க உதவியது குறித்து விசாரணை செய்ய விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா தான் வழங்கிய ஆயுதங்களின் விவரங்களை வெளியிடாது மறைத்து வைத்திருப்பதால் தான் சுப்ரமணியம் சுவாமி இந்தக் கதையைக் கூறியுள்ளார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா மறுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் இந்தியா பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கியது.
முன்னதாக இந்தியா போரில் பயன்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கமாட்டோம் என்று கூறியது உண்மை.
ஹெல்மெட் போன்ற உபகரணங்களை மட்டுமே விற்றதாகக் காரணம் கூறிய இந்திய அரசு, பின்னர் கடற்படைக் கப்பல்களை வழங்கியது.
ராடர்களை வழங்கியது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வழங்கியுள்ளது. இவை யெல்லாம் இந்தியாவின் ஆயுத உதவிகள்.
இன்னும் பல உதவிகள் பற்றிய செய்திகள் மறைந்தே இருக்கலாம்.
அவற்றை வெளிக்கொண்டு வந்து தமிழ் நாட்டில் மீண்டும் தி.மு.க. கூட்டணி ஆட்சியிலேறுவதைத் தடுப்பதற்குத் தான் சுப்ரமணியம் சுவாமி இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளாரா? என்ற சந்தேகம் உள்ளது.
ஆனால், இதில் ஒன்று மட்டும் உண்மை.
புலிகளுக்கு ஏதிரான போரை இலங்கை மட்டும் தனியே நின்று நடத்தவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று ஆசியாவில் வல்லமைமிக்க அரசுகள் இந்தப்போரில் இணைந்திருந்தன என்பதே அது.
இந்த உண்மையை இலங்கை அரசாங்கத்தால் நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது.
அந்த உண்மையை இலங்கை அரசு மறைத்தே வைத்திருந்தாலும், உதவி வழங்கிய நாடுகளின் வாயை நீண்டகாலத்துக்கு அடைக்க முடியாது.
கபில்
Leave a Reply