சென்னை:தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் பணியாற்றலாம் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சாலைகளுக்கான தலைமை ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் நாகப்பன், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. விஸ்வபாரதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில், வக்கீல் ஆர்.எஸ்.பாண்டியராஜ் ஆஜரானார்.
“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:கடந்த 2002, டிசம்பரில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சட்டப் பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து, மத்திய அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் மாநில அரசு தான் தாக்கல் செய்துள்ளது என்றும் டெக்ஸ்டைல் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.எனவே, இந்த அப்பீல் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள விஸ்வபாரதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜேஸ்வரி எனும் பெண் ஊழியர், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இரவு நேரங்களில் தொழிற்சாலைகளில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கும், தொழிற்சாலைகள் சட்டப் பிரிவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. தொழிற்சாலைகளில் இரவு ஏழு மணி முதல் காலை ஆறு மணி வரை பெண்கள் பணியாற்ற, இந்தச் சட்டப்பிரிவு தடை விதிக்கிறது. இதை விசாரித்த அப்போதைய நீதிபதி பத்மநாபன், குறிப்பிட்ட சட்டப் பிரிவு செல்லாது என உத்தரவிட்டார். 2002ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் தொழிலாளர் நலத் துறை அப்பீல் மனுவை தாக்கல் செய்தது.
Leave a Reply