மத்திய மந்திரி கபில்சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு: விமர்சனத்துக்கு எதிர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது.

தணிக்கை அறிக்கையை அமைச்சர் விமர்சிப்பதா என்று கேட்டு, ஒரு அமைச்சருக்குரிய பொறுப்புடன் கபில் சிபல் செயல்பட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரின் அறிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அடிப்படையில், விசாரணையை தொடரும்படியும் சி.பி.ஐ.,க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொலைத்தொடர்பு துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றது. இந்த ஒதுக்கீட்டில் ஏராளமான அளவில் மோசடிகள் நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் பெரிய பிரச்னையானதை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து ராஜா விலகினார். இதையடுத்து, கபில் சிபல் இந்த அமைச்சக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கபில் சிபல், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது தவறானது. அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை’ என்றார்.

இதையடுத்து, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.இது மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சரியான நீதி கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படும். எனவே, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை குறித்த அமைச்சர் கபில் சிபலின் பேட்டியை கருத்தில் கொள்ளாமல் சி.பி.ஐ., விசாரணை நடைபெற வேண்டும். அதை செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார்.

இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சாமியின் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை சீர்குலைக்கும் வகையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் பேசியது கண்டனத்திற்குரியது. ஒரு அமைச்சருக்குரிய பொறுப்புடன் அவர் நடந்து கொள்ள வேண்டும். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது.கபிலின் அறிக்கை உட்பட யாருடைய அறிக்கையையும் கவனத்தில் கொள்ளாமல், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை அடிப்படையில், சி.பி.ஐ., தனது விசாரணையை தொடர வேண்டும். அதேபோல், பத்திரிகைகள் உட்பட வேறு எந்த நபர்கள் வெளியிட்ட அறிக்கைகளைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

நோட்டீஸ்: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்று, உரிய காலத்திற்குள் தொலைத்தொடர்பு சேவைகளை துவக்காத எடிசாலட், யுனிநார், லூப் டெலிகாம், வீடியோகான், எஸ்-டெல், அலையன்ஸ் இன்பிரா, ஐடியா செல்லுலார், டாடா டெலிசர்வீசஸ், சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ், டிஷ்நெட் ஒயர்லெஸ் மற்றும் வோடபோன் எஸ்சார் ஆகிய 11 நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். மேலும், இந்த நிறுவனங்கள் அபராதம் கட்டி விட்டு, இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது. அதை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு துறை அபராதத்தை பெறுவதை தடை செய்யும் வகையில் மனு ஒன்றை சுப்ரமணியசாமி தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், தொலைத்தொடர்பு சேவையை துவங்காத நிறுவனங்கள் மீது தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அந்த ஆணையமும் இதற்கு பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி முதல் தேதி நடைபெறும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் குறுக்கீடு: சபாநாயகருக்கு கடிதம் : “”பொதுக் கணக்கு குழு மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அதிகாரத்தில் அமைச்சர்கள் யாரும் குறுக்கிடக் கூடாது. அப்படி நடக்காமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்,” என, லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு பொதுக் கணக்கு குழு தலைவர் முரளிமனோகர் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் குறித்து பதில் அளிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு போதிய அவகாசம் இருந்தது. அப்போதெல்லாம், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை விமர்சிக்காத அமைச்சகம், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட பின், விமர்சிப்பது ஏன்? இது சரியானதா?ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை மத்திய அமைச்சர் கபில்சிபல் விமர்சித்தது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது. அப்படி நடப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல. அமைச்சகங்களுக்கும் பொதுக் கணக்கு குழுவுக்கும், ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கும் இடையேயான மோதல்கள் தொடர அனுமதித்தால், பின்னர் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் நாட்கள் எண்ணப்பட்டுவிடும். இவ்வாறு முரளிமனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

அவமதித்தேனா: மறுக்கிறார் கபில் : “”ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்ததன் மூலம், எந்த ஒரு நிறுவனத்தையும் நான் அவமதிக்கவில்லை. இருந்தாலும், வதந்திகளுக்கு பதில் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை,” என, தொலை தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:எந்த ஒரு நிறுவனத்தையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் செயல்படவில்லை. எந்த ஒரு நடவடிக்கையிலும், நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறுக்கிடவில்லை. இருந்தாலும், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தொடர்பாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது என் கடமை என்பதால், அதுபற்றிய எனது கருத்தை தெரிவித்தேன்.ஒரு அமைச்சர் என்ற முறையில் மட்டுமல்லாது, இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையிலும் எனது பொறுப்பு, கடமை மற்றும் பணிகளை நான் நன்கு அறிவேன். ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் யோசனையை நான் வரவேற்கிறேன். இந்த யோசனையை முன்பே தெரிவித்திருந்தால், நான் அதுபற்றி பேசியிருக்க மாட்டேன். சர்ச்சையும் எழுந்திருக்காது.இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்த உத்தேச நஷ்டம் வெறும் பூஜ்யம் தான் என்று ஆரவாரமாக வாதிட்ட அவர், நேற்று அதே தொனியில் பேசவில்லை.இதற்கிடையில், அமைச்சர் கபில்சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும் என, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *