மருத்துவ நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு தமிழக அரசு முடிவு

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு பொது தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொறியியல், மருத்துவம் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது.

அதை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, `அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. பொது நுழைவு தேர்வு நடத்தும் உரிமை கவுன்சிலுக்கு உண்டு’ என தீர்ப்பளித்தது.

நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, நுழைவுத் தேர்வு பணிகளை அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடுக்கி விட்டுள்ளது. முதற்கட்டமாக, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முறைப்படியான அறிக்கையை கவுன்சிலின் கூடுதல் செயலாளர் டாக்டர் பி.பிரசன்ன ராஜ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் இளநிலை மருத்துவ படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான அனைத்து வகையான இடங்களும் இந்த தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும்.

நுழைவு தேர்வில் வெற்றி பெற ஒவ்வொரு தாளிலும் தலா 50 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி மாணவர்கள் தலா 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இதுபோல, மிகவும் பின் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45 சதவீத மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், அந்தந்த மாநில அரசுகள் வகுத்துள்ள இடஒதுக்கீடு சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும். நுழைவுத் தேர்வு அடிப்படையில், அகில இந்திய அளவில் தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

இது தவிர, மருத்துவ முதுநிலை படிப்புக்கும் (எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற படிப்புகள்) பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தையும் மருத்துவ கவுன்சில் முன் வைத்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த பொது நுழைவு தேர்வு அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ் இந்த தகவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது-

மருத்துவ பொது நுழைவு தேர்வை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, பொது நுழைவு தேர்வுக்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானபின் அதுகுறித்த எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு வெளியாகி இருப்பதால், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படும். அத்துடன் மருத்துவ பொது நுழைவு தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *