மார்ச் மாதம் ஓட்டுப்பதிவு: மேல்-சபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு; தேர்தல் கமிஷன் முடிவு

posted in: மற்றவை | 0

தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “மீண்டும் தமிழ்நாட்டில் மேல்-சபை அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம்
12-ந்தேதி, தமிழக மேல்-சபை அமைப்பதற்கான தீர்மானத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, பாராளுமன்றத்தின் இரு சபையிலும் ஏற்கப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ் நாட்டில் மேல்-சபை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. புதிய சட்டசபை கட்டிடத்தில் இதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்-சபையில் 78 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களில் 26 பேர் சட்டசபை எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 26 உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். 7 பட்டதாரி உறுப்பினர்களும், 7 ஆசிரியர் உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 12 பேர் கவர்னர் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

மேல்-சபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேல்- சபை தேர்தல் தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது.

சட்டசபை தேர்தலுக்குப் பிறகுதான் மேல்-சபை தேர்தல் நடைபெறும் என்ற கருத்தும் நிலவியது. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே மேல்சபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறும்போது, தமிழக மேல்- சபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தி வருகிறது. தேர்தலுக்கான அனுமதியை சட்ட ஆலோசனை குழு 2 நாட்களில் வழங்கும். அதன் பிறகு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். 10 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த வாரம் மேல்-சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 40 நாட்களில் தேர்தல் நடைபெறும். எனவே மார்ச் மாதம் 15-ந்தேதியையொட்டி மேல்-சபை தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மேல்-சபை தேர்தல் 3 நாட்கள் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அதன் படி முதல் நாள் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அடுத்த நாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் தேர்தலும், 3-வது நாள் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வந்தாலும், மேல்- சபை தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இப்போது உள்ள எம்.எல்.ஏ.க்களே மேல்-சபை உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கலாம். சட்டசபை தேர்தலால், மேல்-சபை தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *