மிசா காலத்தில் என் உயிரை காப்பாற்றிய சென்னை பொது மருத்துவமனை : ஸ்டாலின் உருக்கம்

posted in: அரசியல் | 0

சென்னை: மிசா காலத்தில் என் உயிரை சென்னை பொதுமருத்துவமனை தான் காப்பாற்றியது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்தார்.

சென்னை பொதுமருத்தவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

எனக்கும் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கும் நெருக்கம் அதிகம். ஏனெனில் கடந்த 1975-ல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது நான் இந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த சிறையில் தான் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரு நாள் எனக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டபோது இங்கு தான் காவலர்கள் அழைத்து வந்தார்கள். என்ன வி்த்தியாசம் பாருங்கள் அப்போது கைதியாக வந்தேன், இப்போது துணை முதல்வராக வந்திருக்கிறேன்.

என்னை பரிசோதித்த மருத்துவர் ரங்கபாஷியம் என் குடல்வாலில் முற்றிய நிலையில் புண் இருப்பதாகவும், அதை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றாவிட்டால் அது வெடித்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்.

என்னுடன் வந்திருந்த காவலர்கள் சிறைத் துறை அதிகாரிகள் அனுமதியின்றி அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றனர். முதலில் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் பிறகு அனுமதி பற்றி பார்க்கலாம் என்று கூறி அவர் உடனே அறுவை சிகிச்சை செய்து என்னை காப்பாற்றினார்.

சிறையில் இருந்த காலத்தில் வெளியுலகை பார்க்கும் ஆசையால் சைனஸ் என்று கூறி சிகிச்சைக்காக இங்கு அடிக்கடி வந்து ஒரு மணி நேரம், 2 மணி நேரம் இருந்து சிகிச்சை பெறுவதுண்டு என்றார்.

நேற்று சிவகங்ககை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் கலந்து கொண்டார். தேவகோட்டையில் நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் வரும் தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *