வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அவரால் எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் பதவியிலிருந்து விலகி விட வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் சமீபத்தில் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இதையடுத்து நேற்று புஷ்பவனம் கிராமத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி முருகேஷ்வரியை சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையையும் அளித்தார். ஜெயக்குமாரின் குழந்தைகள் படிப்புச் செலவை அதிமுகவே ஏற்கும் என்றும்
அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆசியாவில் மிகப் பெரிய நாடு இந்தியா. நமது நாட்டின் முப்படைகளின் வலிமையைக் கண்டு உலக நாடுகளே அஞ்சுகின்றன. ஆனால், மிகச் சிறிய நாடான இலங்கை துணிந்து நமக்கு சவால் விடுகிறது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று வருகிறது. இதற்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்.
இலங்கைக் கடற்படையால் மீனவர் ஜெயக்குமார் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் செயல்பட முடியாத பலவீனமான பிரதமராக உள்ளார். மாநில அரசைப் பொருத்தவரையில், தமிழக முதல்வருக்கு ஆட்சி செய்வது, அரசுப் பணிகள் செய்வது, மக்கள் பணியாற்றுவது ஆகியவற்றில் அக்கறையில்லை. அவரால் எதையும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் பதவியிலிருந்து விலகி விட வேண்டும்.
கொல்லப்பட்ட ஜெயக்குமார் அதிமுக உறுப்பினர். அதனால்தான் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது எனது கடமை என்று கருதி, வந்தேன்.
அதிமுக சார்பில் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கணவரை இழந்து தவிக்கும் முருகேஸ்வரிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது என்பதை அறிவேன். இருப்பினும், அதிமுக சார்பில் செய்ய முடிந்த உதவியைச் செய்துள்ளேன்.
கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இக் குழந்தைகள் உரிய கல்வி பெற வேண்டிய உதவிகளை அதிமுக செய்யும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். அன்றைக்கு இருந்த மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது சட்டப்படி செல்லாது. இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை அப்போதைய மத்திய அரசு பெறவில்லை. எனவே, கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
மீனவர்கள் இந்த பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்பட வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து, மீனவ மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்க முடியும் என்றார் ஜெயலலிதா
வழக்கமாக எந்த இடத்திற்கு வந்தாலும் ஆர்ப்பாட்டமாக வருவார் ஜெயலலிதா. ஆனால் நேற்று எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் வந்து போனார். அவர் வந்ததே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு நிசப்தமான வருகையாக ஜெயலலிதாவின் வருகை இருந்தது.
Leave a Reply