சென்னை: விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை எனக்கு இருந்தபோதும், அதற்குச் செல்லாமல் இங்கே வந்து விட்டேன். அது எனது கடமையும் கூட. ஆனால் நான் முதல்வராக ஆனாலும், முதல்வரை விட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமையை தரக்கூடியவன். எனவேதான் இங்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு குரல் கொடுத்தது என்பதைக் காரணமாகக் காட்டி 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அப்படி கலைக்கப்பட்ட போது வைரமுத்து எழுதிய ஒரு கவிதை வெளிவந்தது.
“அடியே, அனார்கலி!
உனக்குப் பிறகு இந்த நாட்டில்
உயிரோடு புதைக்கப்பட்டது
ஜனநாயகம் தானடி”
என்று எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்து நான் அவருக்குத் தொலைபேசியிலே வாழ்த்துச் சொன்னேன். வாழ்த்துச் சொல்லிவிட்டு, “ஆட்சிக் கலைக்கப்பட்டதால் எனக்கு ஆதாயம்தான்” என்றேன். “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவர் பதற்றத்தோடு கேட்டார். நான் சொன்னேன் – “ஒரு அருமையான கவிதை கிடைத்தது அல்லவா?” என்றேன்
கவிதைகளை ரசிக்கக்கூடிய எனக்கு, ஆட்சிக் கலைக்கப்பட்டது பெரிதாகத் தெரியவில்லை. இந்தக் கவிதை எனக்கு ஆறுதலாக இருந்தது. அதனால்தான் அவருக்கு உடனடியாகத் தொலைபேசியிலே வாழ்த்துச் சொன்னேன். “இனியும் இப்படிப்பட்ட கவிதைகளை எழுதக்கூடிய நிலை எனக்கு வரவேண்டாம்” என்று வைரமுத்து சொன்னார். “எல்லோரும் ஒழுங்காக இருந்தால் அது வராது” என்று நான் அப்போது சொன்னேன். “எல்லோரும் இருப்பார்கள் – இருப்பீர்கள்” என்ற நம்பிக்கையோடு இந்த விழாவிலே கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.
நான் ஒரு நாத்திகன். அந்த நாத்திக கொள்கையை இளைஞனாக இருக்கும்போது, பாடல்கள் மூலமாக விளக்கியிருக்கின்றேன். அதுவும் மெட்டுக்கு எழுதிய பாடல் ஒன்று. கவிஞர் வைரமுத்து இங்கே சொன்னாரே, மெட்டுக்கு பாடல் எழுதுவது என்று. அப்படி நான் எழுதிய பாடல். இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நானும் அந்தக் காலத்தில் இளைஞனாக இருக்கும்போது, மெட்டுக்குப் பாட்டு எழுதியவன்தான்.
ஒரு முறை நாங்கள் எல்லாம் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருந்தபோது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்னை சந்திப்பதற்காக ஸ்டுடியோவிற்கு காரிலே வந்திருக்கிறார். வந்தபோது, அவருடைய காரை ஏ.வி.எம். ஸ்டுடியோவின் முகப்பிலேயே – வாசற்புறத்திலேயே நிறுத்தி விட்டார்கள். “ஏனப்பா நிறுத்தி விட்டாய்?” என்று கேட்டதற்கு, அந்த கேட்டிலே இருந்தவர், “உள்ளே ரிக்கார்டிங் நடக்கிறது – கார் போனால் அதனுடைய சத்தம் ரிக்கார்டிங்கில் பதிவாகிவிடும். ஆகவே, போக முடியாது” என்று தடுத்து விட்டார். அவர் சிறிது நேரம் காரிலேயே உட்கார்ந்திருந்தார்.
பாரதிதாசன் வந்து உட்கார்ந்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு, நாங்கள் வாசலுக்குச் சென்று – “என்ன இங்கேயே உட்கார்ந்து விட்டீர்கள்?” என்று கேட்டோம். “இல்லை, இதுதான் நடந்தது – ஏதோ, நான் என் காரிலே உள்ளே வந்தால், அந்தச் சத்தம் போய் ரிக்கார்டிங்கை கெடுத்து விடுமாம்” என்று சொன்னார். “அதெல்லாம் ஒன்றும் கெடுக்காது” என்று சொல்லி, அவரை உள்ளே அழைத்துப் போனோம். அவர் சொன்னார் – “எப்படி ரிக்கார்டிங்கிலே அந்த சத்தம் எல்லாம் பதியும்? – என்னுடைய “கமழ்ந்திடும்” என்ற வார்த்தையை ரிக்கார்டிங் பதிவு பண்ண மாட்டேன் என்கிறது – அது எப்படி இதையெல்லாம் பதிவு செய்யும்?” என்று கேட்டார்.
“என்ன, சொல்லுங்கள் கதையை” என்றோம். “ஒண்ணுமில்லை” – ஒரு ஸ்டுடியோ பேரைச் சொல்லி, அங்கு “கமழ்ந்திடும் பூவில் எல்லாம், தேனருவி கண்டேன்” என்று எழுதியிருந்தேன். முதலாளியைக் கூப்பிட்டு – ரிக்கார்டு செய்பவர் அந்த “கமழ்ந்திடும்” என்ற வார்த்தையை எல்லாம் ரிக்கார்டு செய்ய முடியாது – அது ரிக்கார்டு ஆகாது – ரிக்கார்டு ஆனாலும், கேட்பவர்களுக்குப் புரியாது. ஆகவே, “கமழ்ந்திடும்” என்ற வார்த்தைக்குப் பதிலாக, வேறு வார்த்தையைப் போடச் சொன்னார்களாம். உடனே பாரதிதாசனுக்கு கோபம் வந்து,
அப்படியா, பரவாயில்லை – “கமழ்ந்திடும்” என்பதற்குப் பதிலாக, “குலுங்கிடும் மலர்களில் எல்லாம், தேனருவி கண்டதாலே” என்று மாற்றி எழுதிக்கொடுத்தேன். ஆகவே, “கமழ்ந்திடும்” என்கிற தமிழை ரிக்கார்டு செய்ய முடியாத அந்த மெஷின், கார் சவுண்டை ரிக்கார்டு பண்ணுமா?” என்று ஆச்சர்யத்தோடு பாரதிதாசன் கேட்டார். அது ஆச்சர்யம் அல்ல – தமிழைச் சரியாக பதிவு செய்ய முடியாது என்று சொன்னது அவருக்கு அவ்வளவு ஆத்திரத்தை அன்றைக்கு உண்டு பண்ணியது. ஏன் சொல்கிறேன் என்றால், தம்பி வைரமுத்து இங்கே எடுத்துக் காட்டியதைப்போல, பல பாடல்கள் முழுமையாக நாம் கேட்க முடியாமல், இசை அதைத் திசை திருப்பி விடுகிறது.
இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். “மருத நாட்டு இளவரசி” என்று ஒரு படம். நான் எழுதியது நடிகர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக முதன்முதலாக நடித்தது. ஜானகி “மருத நாட்டு இளவரசி”யாக நடித்த அந்தப் படம். அந்தப் படத்தை மைசூரிலே ஷூட்டிங் செய்து, ஒரு மாத காலம் தயாரித்து படம் முடிவடைந்ததும், அதை வெளியிடுவதற்காகத் தேதியை எல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு, படத்தைப் போட்டுப் பார்க்கலாம் என்று சென்னையிலே கோடம்பாக்கம் பக்கத்திலுள்ள ஒரு ஸ்டுடியோவில் நாங்கள் அதைப் போட்டுப் பார்த்தோம். அப்போது ஒருவசனம்கூட எங்கள் காதிலே விழவில்லை. நான்தான் வசனம் எழுதினேன். என்ன வசனம் என்று எனக்குப் புரியவே இல்லை. எல்லோரும் திகைத்துப் போனோம்.
நாளைக்கு எப்படி படத்தை வெளியிடுவது? என்று யோசித்தபோது, எனக்கு ஒரு யோசனை தோன்றியது. “தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள் – இந்த ரீ-ரிக்கார்டிங்கை அப்படியே வெட்டி எடுத்து விடுங்கள் – எடுத்து விட்டுப் படத்தைப் போட்டுப் பாருங்கள்” என்றேன். அப்படியே இரவோடு இரவாக அந்த ரீ-ரிக்கார்டிங்கை எல்லாம் அகற்றிவிட்டு, மறுநாள் படத்தைப் போட்டால், வசனம் தெளிவாகப் புரிந்தது. அந்த “மருத நாட்டு இளவரசி” 100 நாள் படமாக ஓடிற்று என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இசையோடு கூடி வருகின்ற நேரத்தில், இசையும் புரியாமல், எழுதிய வார்த்தைகளும் புரியாமல் வீணாக ஆகி விடக் கூடாது என்ற கவலைதான் வைரமுத்துவுக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் இன்னமும் இருக்கிறது.
இந்த விழாவிலே கலந்து கொண்டிருக்கின்ற இசை வாணர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வேன் – கவிஞர்களை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம் அந்தக் கவிஞர்களின் கவிதைகளைக் காப்பாற்றி உயிரோடு, அவைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இசையமைக்கின்றவர்களுக்கு உண்டு. “இசை” அமைக்கின்றவர்கள் யாரும் நாளைக்கு என்னை “வசை” பாடக்கூடாது. இப்படிப் பேசினாரே? என்று எண்ணக் கூடாது. பாட்டுப் புரியும்படியாக இசையமைத்தால்தான், இசையை அமைத்தவர்களுக்கே பெருமை. பாட்டுப் புரியாமல் இசையமைத்தால், இசை அமைத்தவருக்கும் பெருமை இல்லை. பாட்டு எழுதியவருக்கும் பெருமை இல்லை.
வைரமுத்து 1000 பாடல்களை 30 ஆண்டுக் காலத்திலே எழுதி முடித்திருக்கிறார் என்றால், அவர் இங்கே சொன்னதைப் போல, இந்த 30 ஆண்டுக் காலத்தில் ஒரு 20 ஆண்டுக் காலமாக நானும் – அவரும்; காலையிலே நான் 7 மணிக்கெல்லாம் எழுந்து விடுவது வழக்கம். 8 மணிக்கெல்லாம் வைரமுத்துவின் குரல் தொலைபேசியிலே ஒலிக்கும். நான் அவருக்கு விடை அளிப்பேன். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.
ஒரு கவிஞரும், கலைஞரும் பேசுகின்ற பேச்சாக மாத்திரம் அல்ல; காதலர்கள் பேசுகின்ற பேச்சைப் போல, அது இருக்கும். உலக விஷயங்கள் இருக்கும் – சினிமா விஷயங்கள் இருக்கும் – ரஜினியை பற்றி பேசுவோம் – கமலைப்பற்றி பேசுவோம். “என்ன பேசுவீர்கள்?” என்று என்னைக் கேட்காதீர்கள். தனியாக அதைச் சொல்வேன். அந்த அளவிற்கு என்னோடு நெருங்கிப் பழகிய நண்பராக, சகோதரராக, என் குடும்ப உறுப்பினர்களிலே ஒருவராக இருப்பவர் வைரமுத்து. அவருக்கு இன்றைக்குச் சிறப்புச் செய்யப்படுகிறது. அவருடைய பாடல்கள் ஆயிரத்தை எட்டி – அதைத்தாண்டி மேலும் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை எண்ணும்போது, நானே அந்த பெருமையை பெற்ற அத்தகைய நிலையை எய்துகின்றேன்.
அவரை இன்றைக்கு நான் பாராட்டுவதற்கு வரவேண்டும் என்று அழைக்கப்பட்டபோது, எனக்கு ஒரு மிக முக்கியமான வேலை. விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை – அது முதலமைச்சருடைய கடமை. அதற்குச் செல்லாமல் இங்கே வந்து விட்டேன் என்றால் என்ன பொருள்? நான் முதல்-அமைச்சராக இருக்கலாம். ஆனாலும், முதல்-அமைச்சரைவிட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமையை தரக்கூடியவன்.
புலவர் ஒருவருக்கு சேரமான் இரும்பொறை என்ற மன்னன் கவரி கொண்டு விசிறினார் என்ற இலக்கியம் எல்லாம் உங்களுக்குத் தெரியும் – அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மோசிகீரனார் என்று ஒரு புலவர். அவர் தன்னுடைய நிலையை உணர்த்தி, பொருள் பெற அல்லது உதவி பெற அரசரை நாடுகிறார். அப்படி அரசனைக் காணச் செல்லும்போது, அரசர் அரண்மனையிலே தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்குள்ள விதி என்னவென்றால் அங்கே ஒரு முரசு கட்டில் இருக்கும். அதிலே போர் முரசு, மங்கல முரசு எல்லாம் வைக்கப்பட்டிருக்கும். அந்த முரசுக்கு யார் இடைïறு செய்து, அதை அகற்றினால், அல்லது முழங்கினால் யார் என்று பார்த்து அவருடைய தலையை வெட்டுகின்ற பழக்கம் அந்த சேரமான் இரும்பொறை மன்னருடைய அரண்மனையிலே இருந்தது.
புலவர் அரண்மனைக்கு சென்றார், அரசர் உறக்கத்திலே இருக்கிறார் என்றதும், வந்த களைப்பில் தானும் உறங்கலாமே என்று சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. முரசு மாலையிடப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. முரசிலே ஏறிப்படுத்து, காலை வளைத்துக்கொண்டு உறங்கி விட்டார். இதை ஒரு வீரன் பார்த்தான். அரசே, அரசே என்று கத்திக் கொண்டே அரசரிடம் ஓடினான்.
என்னவென்று வீரனைப் பார்த்து அரசர் கேட்டார். நம்முடைய முரசு கட்டிலில் ஒரு மனிதன் படுத்திருக்கிறான் என்று கூறினான். இவன் எண்ணினான் இதைக் கேள்விப்பட்டதும் அரசர் வாள் கொண்டு முரசில் படுத்தவனை வெட்டி விடுவான் என்று. ஆனால் சேரமான் இரும்பொறை வந்து பார்த்தான். முரசு கட்டிலில் படுத்திருப்பது மோசிகீரனார் என்ற புலவர் என்று தெரிந்ததும், அய்யோ பாவம் களைத்துப்போய் வந்திருக்கிறாரே என்று விசிறி கொண்டு வந்து புலவருக்கு விசிற ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் கழிந்ததும், தூங்கிக் கொண்டிருந்த புலவர் எழுந்து, என்ன மன்னா, இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மன்னர், இல்லையில்லை, இது நான் தமிழுக்குச் செய்கின்ற தொண்டு என்று சொன்னார்.
அதைப் போல தான் இங்கே பிரதமர் வருகிறார் என்றாம்கூட அங்கே செல்லாமல் இந்த “மன்னன்” இங்கே வந்ததற்கு காரணம் தமிழுக்குச் செய்கின்ற தொண்டு தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
எத்தனையோ விருதுகளை, தேசிய விருதுகளை ஐந்து முறை பெற்ற ஒரு கவிஞர் என்றால், அவர் வைரமுத்து என்பதை மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட கவிஞரை தேசிய விருது பெற்ற கவிஞரை தமிழக அரசின் விருதுகளை பெற்ற கவிஞரை பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞரைப் பாராட்டி மகிழ்வதிலே அவருடைய குடும்பத்திலே ஒருவன் என்ற முறையிலே அவர் இங்கே சொன்னாரே, “தமிழ் ஆசான்” என்று; “ஆசான்” அல்ல நான் அவருக்கு என்றென்றும் “துணைவனாக” இருக்கக்கூடிய ஒருவன் என்ற முறையில் அவரை வாழ்த்துகிறேன் என்றார் முதல்வர்.
Leave a Reply