மோட்டார் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு சப்ளை செய்வதற்காக, மன்னார்குடியில் நிலக்கரி படுகை மீதேன் வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் நேற்று கையெழுத்தானது.
இந்தியாவில் நிலக்கரி படுகை மீதேன் வாயுவை வணிகரீதியாக உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், மேற்கு வங்காள மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில், நிலக்கரி படுகை மீதேன் வாயுவை உற்பத்தி செய்து, அசன்சால் மற்றும் துர்காபூர் ஆகிய இடங்களிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம், அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலமாக மோட்டார் வாகனப் பயன்பாட்டிற்காக விநியோகித்து வருகிறது. தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய மன்னார்குடி பகுதியிலுள்ள நிலக்கரி படுகை மீதேன் வாயு இருப்பு பகுதியை ஆய்வு செய்து, உற்பத்தி செய்வதற்கான அனுமதியை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்திற்கு இந்திய அரசு அளித்துள்ளது.
உற்பத்தியாகக் கூடிய சாத்தியக் கூறுகள் உறுதியானவுடன், தொடக்க கட்ட ஆய்வுகளுக்காக ரூ.100 கோடியை இந்த நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. வணிக ரீதியில் மேலும் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை இந்தத் திட்டதில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினால் அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தமிழ்நாட்டிற்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சுமார் 1500 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இதுதவிர, ராயல்டி மற்றும் மதிப்பு கூட்டிய வரி ஆகிய வகையில் தமிழ்நாட்டிற்கு வருவாய் கிடைக்கும். இந்த நிறுவனத்திற்கு மாநில அரசு பெட்ரோலிய ஆய்வாராட்சி உரிமம் கொடுத்திருப்பதோடு, இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள் கிடைப்பதற்கும் உதவி செய்யும்.
தமிழக அரசு சார்பாக தொழில் துறையின் முதன்மைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி யோகேந்திரகுமார் மோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், சுரங்கம் மற்றும் கனிமத் துறை ஆணையர் தங்க கலியபெருமாள், நிறுவனத்தின் சார்பில் தலைமை இயக்க அலுவலர் பிரசாந்த் மோடி, பொது மேலாளர் எஸ் ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Leave a Reply