யூசுப் பதானின் மின்னல் விளாசலில் தெ. ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா

கேப்டவுன்: யூசுப் பதானின் அபாரமான ஆட்டத்தால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

கேப்டவுனில் நடந்த இப்போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 220 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா களம் இறங்கியது. முன்னணி ஆட்டக்காரர்களை சொற்ப ரன்களில் இழந்து இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது.

100 ரன்களை எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்களை இந்தியா இழந்திருந்தது. அந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் யூசுப் பதான். நெருக்கடியான நேரத்தில் பிரமாதமாக விளையாடக் கூடியவர் என்பதை மீண்டும் நேற்று நிரூபித்தார் பதான். சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோஹன் போத்தா மற்றும் டுமினியின் பந்துகளைப் பதம் பார்த்த அவர் மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார்.

அதிரடியாக ஆடிய அவர் 50 பந்துகளில் 59 ரன்களைக் குவித்தார். பதானின் ஆட்டத்தால் பாதாளத்தில் கிடந்த இந்தியா படு வேகமாக முன்னேறி வெற்றிப் படிக்கட்டின் உச்சியை எட்டிப் பிடித்தது.

அடித்து ஆட முடியாத அளவிலான பிட்ச்சில் பதான் காட்டிய வான வேடிக்கையால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் நிலை குலைந்து போய் விட்டனர்.

பதானும், சுரேஷ் ரெய்னாவும் (37) சேர்ந்து 6 விக்கெட்டுக்கு 75 ரன்களைச் சேர்த்தனர். இருப்பினும் அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் ஹர்பஜன் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து (23) அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

தென் ஆப்பிரிக்காவின் மார்னி மார்க்கல் 3 விக்கெட்களையும், ஸ்டெயின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆனால் பதான் போட்ட போட்டில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களால், இந்தியாவின் தடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 28வது ஓவர் வரை இந்தியாவின் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. அப்போது பதான் 6 ரன்களுடன் இருந்தார். அதன் பின்னர் பதான் விஸ்வரூபம் எடுத்து விளாச ஆரம்பித்தார். போத்தா, சோத்சோபே, டுமினி என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. பவுண்டரிகள் சரமாரியாக பறந்தன.
Read: In English
அதை விட உச்சமாக போத்தாவின் ஒரு ஓவரில் 3 சிக்சர்களை விளாச போத்தா சோர்ந்து போய் விட்டார்.

ஏற்கனவே 2வது ஒரு நாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ஈட்டி இந்தியா அசத்தியது. இந்த நிலையில் 3வது போட்டியில் அட்டகாசமாக ஆடி அபாரமாக வென்றது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *