ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகியுள்ளது. நீரா ராடியாவுடன் பேசும்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் கருத்துக்களை வெளியிட்ட கனிமொழி, பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராசாவை திமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவை விட்டும், திமுக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக கூறி முதல்வர் கருணாநிதியிடம் அழகிரி கடிதம் கொடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்திற்கும் அவர் வரவில்லை.

இந்த நிலையில் அழகிரி தனது கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாக தெரிகிறது. இதை நிறைவேற்ற முடியாவிட்டால் தான் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

– ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

– நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

– சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.

இதுதவிர கட்சியி்ல் மாநில அளவில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும் என்றும் அழகிரி கோரியுள்ளாராம். மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

இருப்பினும் அழகிரியின் இந்த போர்க்கொடி முதல்வரைக் கவலைப்படுத்தவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று நடந்த திமுக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் நம்முடன் நீடிப்பது உறுதி. அதேபோல பாமகவும் நம்முடன் வரும். எனவே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் கூறியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *