ராஜா இடத்தில் ராஜதந்திரம்: தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பார்முலா

posted in: அரசியல் | 0

எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.. நேற்று முன்தினம் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும்; யார், யாருக்கு கல்தா கிடைக்கும் என, யூகத்துக்கு மேல் யூகங்களாக கிளம்பியது.

சாமானியர்கள் எதிர்பார்த்தது, தி.மு.க.,வில் பாலுவுக்கு பதவி உறுதி; எவரும் எதிர்பாராதது, தி.மு.க.,வில் புதிதாக யாருக்குமே பதவி கிடைக்காதது என்பது!

அங்கு தான் நிற்கிறார், “அரசியல் சாணக்கியர்’ என, அறியப்படும் முதல்வர் கருணாநிதி.அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு எழுந்ததுமே, டில்லியிலும், தமிழகத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது உண்மை. அழகிரி சென்று கருணாநிதியை பார்த்தார்; பிரதமர் இல்லத்துக்கு பாலு விரைந்தார்; சோனியாவை இளங்கோவன் சந்தித்தார்.அரசியல் கூட்டல், கழித்தல் கணக்கு தெரிந்தவர்கள், “அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சின் சங்கிலித் தொடர் தான் இது; தன் நெடு நாள் நண்பர் பாலுவுக்காக, முதல்வரிடம் பரிந்துரைத்தார் அழகிரி; அதன் தொடர்ச்சியாக, பிரதமரிடம் சென்று விவரம் தெரிவித்தார் பாலு. கூட்டணி விரிசல்கள் பூசப்பட்டுவிட்டதால், கருணாநிதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா, இளங்கோவனை மன்னிப்பு கேட்கச் சொன்னார்’ என, இந்தச் சங்கிலித் தொடர் சந்திப்புக்கு விளக்கம் அளித்தனர்.

ஆனால், பதவியேற்பு தினத்தின் மாலையில் நடந்ததே வேறு; தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருத்தருக்கும் புதிய பதவி கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்… இருக்கிற தி.மு.க., அமைச்சர்களின் துறை கூட மாற்றப்படவில்லை. அனைத்து அரசியல் விமர்சகர்களின் அதிர்ச்சியும், அடுத்த நாள் நாளிதழ்களில் எதிரொலித்தது.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே அனைவரும் கருதினர். தி.மு.க., தலைமை மீது காங்கிரசுக்கு இருக்கும் கோபம் தணியவில்லை என்றே நம்பினர். ஆனால், உண்மை அதுவல்ல; தி.மு.க., தரப்பு அதிர்ச்சி அடைந்திருந்தால், கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் அதன் அதிர்வலைகள் தெரிந்திருக்கும். ஆனால், அங்கு எல்லாமே வழக்கம் போல போய்க் கொண்டிருக்கின்றன.

விஷயம் என்னவென்று விசாரித்ததில் தெரியவந்தது, இது:நடந்தது எல்லாமே தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்து தான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால், அவருடைய விருப்பத்தின்படி தான் நடந்துள்ளது.தமிழக முதல்வரின் கணக்கு மிக எளிமையானது… காலியாக உள்ள ராஜாவின் பதவிக்கு, தி.மு.க., தரப்பில் யாரை விரல் நீட்டினாலும் பதவி கிடைத்துவிடும். அப்படி, ஒரு அமைச்சர் பதவிக்காக ஆள் தேடுவதை விட, அடுத்து வரும் சட்டசபை தேர்தலை கவனத்தில் கொள்வது தான் கெட்டிக்காரத்தனம். அதன் விளைவாகவே, ராஜா இடத்தில், தன் ராஜதந்திரத்தை வைத்தார் முதல்வர்.

மத்திய அமைச்சரவையில் புதிய இடம் வேண்டாம் என முடிவெடுத்தார். தற்காலிகமாக அல்ல; நிரந்தரமாகவே. அதற்கு கைமாறாக, எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்தக் குடைச்சலும் இருக்கக் கூடாது; ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்பதற்கெல்லாம் இப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.கடந்த தேர்தலை விட கூடுதலாக சீட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். புதுச்சேரியிலும் தி.மு.க., பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும். மத்தியில் காங்கிரஸ்; மாநிலத்தில் தி.மு.க., என்பதே இனி, “பார்முலா’வாக இருக்க வேண்டும் (அ.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உறவு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர்., பார்முலாவாக இருந்ததும் இதுவே) பரஸ்பர வெற்றிக்காக இரு கட்சிகளும் பாடுபட வேண்டும்.

இது தான் காங்கிரஸ் மேலிடத்திடம், தி.மு.க., வைத்த கோரிக்கை. எந்தக் குறையும் தெரியாததால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டது டில்லி தர்பார். விஷயம் இருதரப்புக்கும் சுமுகமாக முடிந்தது. அந்தத் தகவல் தான் இளங்கோவனிடம் தெரிவிக்கப்பட்டது.–இவ்வாறு அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. இவை தான் உண்மையா, இருதரப்புக்கும் இடையில் உள்குத்து ஏதேனும் இருக்கிறதா என்பது, போகப் போகத் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *