மதுரை:மதுரையில் 500 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்க டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தேனி முத்துதேவன்பட்டி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த ரிட் மனு:மதுரையில் கிளிக் அட்வர்ஸ் சொல்யூசன் நிறுவனத்தை ஜோஸ் மோசஸ், ஆண்டனி, பிரபாகர், குகநாதன் நடத்தினர். அட்ஷர்ப்2 ஏர்ன் என்ற வெப்சைட்டில் பணம் கொள்முதல் செய்தால், தினமும் கமிஷன் கிடைக்கும் என நால்வரும் தெரிவித்தனர்.
அதை நம்பி, குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்பில் 10.37 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தேன். பின், நால்வரும் நிறுவனத்தை மூடி விட்டனர். என்னை போல பலரிடம் 500 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.2009 அக்., 22ல் 400 பேர், மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார், நடவடிக்கை எடுக்க மறுத்தனர்.
பின், போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக, 22 பேரிடம் மட்டும் 14 லட்சம் மோசடி நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கண்ணன், வெங்கடசுப்ரமணியன் ஆஜராயினர். இம்மனு குறித்து பதிலளிக்க டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி., போலீஸ் கமிஷனர் மற்றும் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டார்.
Leave a Reply