சென்னை : “”இந்திய வரலாற்றுப் பாடத்தில் விடுபட்டுள்ள, “பழங்கால தமிழர் நாகரிகம்’ என்ற பகுதியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல், தமிழகத்தின் அனைத்து பல்கலைக் கழக பாடத் திட்டத்திலும் இப்பகுதி சேர்க்கப்படும்,” என தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வரலாற்றுப் பாடத்தில், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பிறகு வேத கால ஆரியர் நாகரிகம் உள்ளது. இரண்டிற்கும் நடுவே வர வேண்டிய பழங்கால தமிழர் நாகரிகம் என்ற பகுதி விடுபட்டுள்ளது. இந்திய வரலாற்றுப் பாடத்தில் பழங்கால தமிழர் நாகரிகத்தை சேர்க்க, கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று ஆசிரியர் வின்சன்ட் ஸ்மித், 1910ம் ஆண்டு இந்திய வரலாற்று நூலை எழுதினார். அவர், “இந்திய வரலாற்றை காவிரிக் கரையிலிருந்து தான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஆனால், கங்கைக் கரையிலிருந்து எழுதுவதே வழக்கமாக இருக்கிறது என மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கூறுகிறார். அவரது கூற்று சரி தான் என்றாலும், தற்போது அதற்கு போதிய சான்றுகள் கிடைக்கவில்லை என்பதால், எதிர்காலத்தில் சான்றுகள் கிடைக்கும்போது அவ்வாறு இந்திய வரலாறு முறையாக எழுதப்படும்’ என தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழர் வரலாற்றுக்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே, பழங்கால தமிழர் நாகரிகத்தை எழுதுவதற்கான முயற்சியை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் துவக்கியுள்ளது. கி.மு., 3000 ஆண்டு முதல் கி.மு., 1,500ம் ஆண்டு வரையிலான பழங்கால தமிழர் நாகரிகம், 150 பக்கங்கள் கொண்டதாக உருவாக்கப்படும்.
இதற்காக, வரலாற்று அறிஞர்கள் கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கிறது. தமிழர் நாகரிகப் புத்தகம், அனைத்து தமிழக பல்கலைக் கழங்களுக்கும் அனுப்பப்படும். மேலும், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தமிழக பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டக் குழு தலைவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளோம். அக்கூட்டத்தில், பழங்கால தமிழர் நாகரிகத்தை இளநிலை, முதுநிலை பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதன் பிறகு, பல்கலைக் கழகங்கள் பாடத்திட்டக் குழு மற்றும் கல்விப் பேரவை அனுமதியைப் பெற்று, இந்திய வரலாற்றுப் பாடத்தில் பழங்கால தமிழர் நாகரிகத்தை சேர்ப்பர். மேலும், பழங்கால தமிழர் நாகரிகத்தை பள்ளி அளவிலும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் சேர்ப்பது குறித்து, பள்ளிக் கல்வித் துறையை தொடர்பு கொண்டு பேசுவோம். தேசிய அளவில் தமிழர் நாகரிகத்தை இந்திய வரலாற்றில் சேர்க்க, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்துடன் பேசுவோம். இவ்வாறு ராமசாமி கூறினார்.
Leave a Reply