சென்னை : “”வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை தான்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
சிவபுண்ணியம் – இந்திய கம்யூ: விலைவாசி உயர்வை குறைக்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? பதுக்கலை தடுக்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தை தடுக்கவும் முயற்சி எடுக்கப்பட்டதா? இடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், நிரந்தர தீர்வு காண தொலைநோக்கு திட்டங்கள் இல்லை; சட்டமும் இல்லை. விவசாயிகள் தக்காளியை கிலோ மூன்று ரூபாய்க்கு விற்கின்றனர். அதுவே வெளியில் 40, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, பொருளாதார கொள்கையில் அரசு பங்கு என்ன? இங்கு லட்சக்கணக்கான எக்டேர் விளைநிலங்கள் இருக்கும் போது, நைஜீரியா நாட்டில் பருப்பு விளைவிக்கப் போவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறுகிறார்.
அமைச்சர் வேலு: தக்காளி உற்பத்தி அதிகமாகும் போது விலை குறைகிறது. கச்சா எண்ணெய் விலை கூடும் போது, டீசல் விலை கூடுகிறது. உற்பத்தி பொருட்களுக்கான விலையை தமிழக அரசு கூடுமான வரையில் கொடுத்து வருகிறது. கரும்புக்கு விலை கொடுக்கப்படுகிறது. சர்க்கரை மானிய விலையில் கொடுக்கிறோம்.
சிவபுண்ணியம்: கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் விலை கூடுகிறது என்றால், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் விலையை ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்திருப்பது தான்.
அமைச்சர் பொன்முடி: விலைவாசி எல்லா காலங்களிலும் உயர்ந்து வந்துள்ளது. அதற்கேற்ப வருமானம் கூடியிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டதாக, இதே வாயால் தான் நீங்கள் கூறினீர்கள். அதுபோன்ற நிலைமை இப்போது இல்லை. வருமானம் கூடும் போது விலை உயருவது இயற்கை தான்.
பீட்டர் அல்போன்ஸ்: இலங்கையில் வெங்காயம் ராணுவ அதிகாரிகளை வைத்து விற்கப்படுகிறது. சீனாவில் நான்கு மாநிலங்களில் பட்டினிச் சாவு ஏற்பட்டு, மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இப்படி தேசம் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில், சாமானிய மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விலைவாசியை குறைக்க, மேற்குவங்க முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள், விலையை குறைப்பது பற்றி முடிவெடுக்க, தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வுக்கு நீங்களும் பொறுப்பு, நாங்களும் பொறுப்பு. இதை அரசியலாக்க முயற்சிக்காதீர்கள்.
சிவபுண்ணியம்: காங்கிரஸ் அரசு நியமித்த அமர்த்தியா சென் தலைமையிலான குழு தான், நாட்டில் 80 சதவீத மக்கள் வாழ முடியாத நிலையில் வசிப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
Leave a Reply