வரும் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி டில்லி செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள உள்துறை அமைச்சக மாநாட்டில் பங்கேற்கிறார்.
டில்லியில் அவர் இரண்டு நாட்கள் தங்குவதால், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்தும், தேர்தல் வெற்றிக்கான உத்திகள் வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம், முதல் தேதி டில்லியில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு வரும் 30ம் தேதி மாலை முதல்வர் கருணாநிதி, டில்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.அங்கு, புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். மறுநாள் 31ம் தேதியும் அவர் டில்லியில் தங்குகிறார். பிப்., 1ம் தேதி, உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். பின், 2ம் தேதி மாலை டில்லியிலிருந்து சென்னை திரும்புகிறார்.உள்துறை அமைச்சக மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் டில்லிக்கு சென்றாலும், அதற்காக அவர் ஒருநாள் மட்டுமே செலவிடுகிறார். ஆனால், மூன்று நாட்கள் டில்லியில் அவர் தங்குகிறார் என்பதால், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை, முதல்வர் சந்தித்து பேசும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.சமீபத்தில், சென்னைக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், “தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது’ என, அறிவித்தார். அதே கருத்தை டில்லி மேலிட தலைவர்களும் வலியுறுத்தினர். இதன் மூலம், இந்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் தி.மு.க.,வும் – காங்கிரசும் இணைந்து பயணம் செய்யவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டணியின் அடுத்தகட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில் இரண்டு கட்சிகளும் உள்ளன. இதற்கான பூர்வாங்க வாய்ப்பாக முதல்வரின் டில்லி பயணம் அமையவுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற வேண்டும், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது போன்ற முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதியிடமே சோனியா ஒப்படைத்து விட்டார். ஆனால், இம்முறை ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக காங்கிரசார் எழுப்பி வருகின்றனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் முதல்வர் கருணாநிதி – சோனியா சந்திப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில், தி.மு.க., – காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளும் இடங்களின் எண்ணிக்கை குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், சட்டசபை தேர்தலில் 60 தொகுதிகள் கேட்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். குறைந்தபட்சமாக 50 தொகுதிகளிலிருந்து 60 தொகுதிகளுக்குள் காங்கிரஸ் தரப்பில் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் சோனியா, ராகுல் பிரசாரத்தில் ஈடுபடுவது, கூட்டணிக் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தேர்தல் வெற்றிக்கான உத்திகள் வகுக்கும் திட்டம் குறித்தும் சோனியாவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். டில்லி பயணம் முடிந்த மறுநாள் (3ம் தேதி) சென்னையில் நடைபெறவுள்ள தி.மு.க., பொதுக்குழுவில், டில்லி சந்திப்பின் அடிப்படையில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அழகிரி சந்திப்பு : இதற்கிடையில் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் அழகிரி பத்து நிமிடங்கள் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று மாலையில் நடைபெறுகிறது. ராஜா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், அதற்குப் பதிலாக, தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவம் கேட்கப்பட்டு வருகிறது. டி.ஆர்.பாலு, விஜயன் ஆகியோர் பெயர்கள் அமைச்சர் பதவிக்கு அடிபடுகின்றன.அழகிரி சார்பிலும், இரண்டு எம்.பி.,க்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயந்தி நடராஜன் பெயரும் அடிபடுகிறது. முதல்வருடன், மத்திய ரசாயன அமைச்சர் பேசியது குறித்து தகவல்கள் ஏதும் கூறப்படவில்லை. ஆனால், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்பட்டது.
Leave a Reply