புதுடில்லி: நாட்டில் கடந்த 2 ஆண்டில் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதிப்பதுடன் மத்திய அரசை பெரும் கவலையடையச்செய்துள்ளது.
காரணம் இன்னும் சில மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. இதனால் மத்தியில் ஆளும் காங்., மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படவிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் இருந்தாலும் விலைவாசி உயர்வும் சேர்ந்து எழுந்திருக்கிறது.இது குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறுகையில்; கடந்த 2008 முதல் இன்று வரை 6.7 சதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 8.9 சதமாக உயர்ந்திருக்கிறது.ஆனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது என்பது கவலை தரும் விஷயம் ஆகும் என்றார். சீனாவுடன் நெருங்கும் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்திற்கு கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புரட்டிப்போட்ட வெங்காயம்: கடந்த வாரத்தில் இந்தியாவை புரட்டிப்போட்டிருப்பது வெங்காயம். அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். காய்கறி விலைகளும் அனைவரது பர்சையும் பதம் பார்த்து விட்டது.விலைவாசி கட்டுப்படுத்த முடியாத நிலையில் உணவு பணவீக்கம் தற்போது 18 சதமாக உயர்ந்திருக்கிறது.
ஏறிவரும் விலைவாசி உயர்வு நிலைமை குறித்து ஆலோசிக்கவும், விலைவாசியை குறைக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் விவாதிக்க பிரதமர் அவரது இல்லத்தில் இன்று உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், திட்டக்குழு துணைதலைவர் மாண்டேக்சிங் அனுவாலியா உள்பட பலர் பங்கேற்றிருக்கின்றனர்.
பொங்கல் திருவிழா கொண்டாட இருக்கும் வேளையில் இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் விலைவாசியை குறைக்குமா என்பது தற்போதைய கேள்வி.
Leave a Reply