பயணங்களிலேயே விரைவானதும், செலவு மிகுந்த பயணமுமான விமானப் பயணத்தில், பயணிகளின் சவுகரியம் மிகவும் முக்கியம்.
அந்த சவுகரியத்தை அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் விமானப் பணிப்பெண் வேலை.உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணம் என்ற வித்தியாசமின்றி, வணிகரீதியான அனைத்து விமான நிறுவனங்களும் விமான பணிப்பெண்களை வைத்துள்ளன.
கவர்ச்சி, உலகின் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு மற்றும் கைநிறைய சம்பளம் போன்றவை இந்த தொழிலின் மீதான ஈர்ப்புக்கு முக்கிய காரணம். ஆனால் இந்த தொழிலில் இவற்றையும் மீறிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இந்த வேலையானது எந்தளவிற்கு வருமானம் வரக்கூடிய ஒன்றோ, அதே அளவிற்கு சவாலானதும் கூட.
ஒரு குறிப்பிட்ட விமானம் புறப்படுவதற்கு 1 மணிநேரம் முன்னதாகவே, மூத்த விமான அதிகாரியின் மூலமாக அந்த விமானத்தின் பணிப்பெண்களுக்கு, விமானத்தின் பயண நேரம், உணவு சேவை, அவசர கால தேவைகள், பருவநிலை சூழல்கள் மற்றும் வேறுசில முக்கிய விஷயங்கள் பற்றி வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும். இத்தகைய விஷயங்களை பணிப்பெண்கள் முறையாக புரிந்து, சரியாக செயல்பட்டால்தான் அந்த பயணம் பயணிகளுக்கு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமையும்.
இந்த பணியில் அதிக பொறுமையும், கடின உழைப்பும் தேவை. இந்த பணியின் வேலை நேரங்கள் முறைப்படுத்தப்படாதவை. எப்போது வேண்டுமானாலும் மாறலாம். எனவே எப்போது வேண்டுமானாலும் பொறுமையுடன் வேலைசெய்ய முடியும் என்ற மனநிலை உங்களுக்கு இருந்தால் மட்டுமே இப்பணிக்கு செல்ல வேண்டும்.
மற்றபடி நீங்கள் ஒரு மூடி டைப்பாகவோ, பேதமின்றி அனைவரிடமும் சகஜமாக பேச முடியாதவராகவோ, அடிக்கடி விருப்பு,வெறுப்புகளை பலரிடமும் வெளிக்காட்டுபவராகவோ இருந்தால், விமானப் பணிப்பெண் பணியை பற்றி நினைக்காமல் இருப்பது நல்லது. இந்த துறையில் பெண்களுக்கு மட்டுமல்லாது, ஆண்களுக்கும் சில வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பணிக்கான தகுதிகள்:
குறைந்தபட்ச கல்வித்தகுதி: இன்டர்மீடியேட்/பட்ட படிப்பு
குறைந்தபட்ச உயரம்: 155 செ.மீ.(பெண்கள்) 163 செ.மீ.(ஆண்கள்)
வயது: 19 முதல் 26 வருடங்கள
இவைத்தவிர, தெளிவான தோல் நிறம், நல்ல கண் பார்வை, இயல்பான ஹீமோகுளோபின் அளவு(ஏனெனில் உயரத்தில் பறக்கையில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தலைசுற்றல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்), நல்ல ஆங்கில மொழித்திறன், சுத்தமாக இருத்தல், தெளிவான குரல், நீச்சல் பயிற்சி போன்றவை மிகவும் முக்கியம்.
இதற்கான ஆட்கள் தேர்வு, ஸ்கிரீனிங் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது. மேலும் உங்களுக்கு ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது வெளிநாட்டு மொழியில் புலமை இருந்தாலோ, சுற்றுலா துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருந்தாலோ, தேர்வின்போது அது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
விமான பணிப்பெண் வேலைக்கு தகுதிபெற நீங்கள் மிகவும் அழகான பெண்ணாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களின் மனப்பாங்கு மற்றும் மக்களுடன் பழகுவதிலுள்ள பொதுவான நடத்தை ஆகியவைதான் முக்கியமாக கவனிக்கப்படும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதும் மிகவும் முக்கியம். எனவே இந்த பணிக்கு நீங்கள் முழுத் தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தால், மருத்துவரிடம் சென்று எடை, ஆரோக்கியம் ஆகியவற்றை சோதித்துக்கொண்டு விண்ணப்பிக்க தயாராகவும்.
Leave a Reply