இந்திய விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில், ஒரு விமானத்துறை பல்கலைக்கழகம் மற்றும் விமான அருங்காட்சியகம் அமைக்கப்படுகின்றன.
கடந்த 1911 ம் ஆண்டு பிப்ரவரி 18 ம் நாள், அலகாபாத்திலிருந்து, அதன் புறநகர் பகுதியான நைனி என்ற இடத்திற்கு முதல் வர்த்தக விமானம் இயக்கப்பட்டது. எனவே அந்த நிகழ்வின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் மாணவர்களுக்கான போட்டிகள், விமான சாகச காட்சிகள், கண்காட்சிகள் மற்றும் சாலை காட்சிகள் போன்றவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடம் முழுவதும் நடக்கும் இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் நோக்கம், விமான துறையானது பொதுமக்களை நெருங்கி சென்றடைவதுதான் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறினார். உலகில் விமானம் சம்பந்தப்பட்ட பெரிய மியூசியங்களில் ஒன்றாக இருக்கும் வகையில், இந்தியாவில் அமையவிருக்கும் மியூசியம் தலைநகர் டெல்லியில் இந்த வருடம் ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் முக்கியமாக, விமான போக்குவரத்து மேலாண்மை மற்றும் பயிற்சிக்காக, ஒரு தேசிய பல்கலைக்கழகம் இந்த நூற்றாண்டின் நினைவாக ஏற்படுத்தப்படுகிறது. மேலும் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், விமான போக்குவரத்து சம்பந்தமான படிப்புகளை தங்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று துறையின் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவர்களுக்கிடையில் நடக்கும் போட்டிகளுக்காக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 மாணவர்கள் மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசாக, ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் இலவச பயண டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகளில் மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபடுத்தப்படும். விமான போக்குவரத்தில் தற்போது இந்தியா உலகளவில் 9 ம் இடத்தில் உள்ளது. அனால் 2020 ம் ஆண்டில், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3 ம் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply