சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார்.
இதன் மூலம் மீண்டும் அவர் முதல்வர் பதவியை வகிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் மகன் கோகுலகிருஷ்ணன், பாரு பிரியதர்ஷினி திருமணத்தை இன்று முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக் கொண்டார். ஆகவே, நான் இயல்பாக பெண் வீட்டுக்காரனாக என்னை ஆக்கிக் கொண்டு இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்தி – மணமக்களை வாழ்த்த வந்திருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தின் பெருமக்களையும், வாழ்வதற்கு வகை கண்டு நம்முடைய கடமையை ஆற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
தம்பி பெரிய கருப்பன் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று ஆற்றி வருகின்ற பணிகள் என்னை மாத்திரமல்ல – ஆன்மீகப் பெருமக்களை மிகமிக பெருமையிலே, மகிழ்ச்சியிலே ஆழ்த்தக்கூடியவையாக இருக்கின்றன.
இவரை எப்படி நான் – எந்தப் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து, அறநிலையத் துறை அமைச்சராக ஆக்கினேன் என்று நம்முடைய மத்திய உள் துறை அமைச்சர் வியப்பு தெரிவித்தார்கள்.
நான் எந்தப் பூதக் கண்ணாடியைக் கொண்டும் பார்க்கவில்லை. நான் அணிந்திருக்கின்ற இந்தக் கண்ணாடி வழியாகத்தான் அவரைப் பார்த்தேன். ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து – “இவர்தான் சரியான ஆள் -அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு’’ என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன்.
பெரியகருப்பன் பெயரால் கொஞ்சம் அச்சுறுத்தல் தரக்கூடியவர். மீசையால் கொஞ்சம் அச்சுறுத்தக் கூடியவர். ஆனால், இரண்டுக்கும் மாறுபாடாக உள்ளத்தால் நம்முடைய அன்பையெல்லாம் கவர்ந்தவர். அப்படிப்பட்ட நல்ல தம்பி-அன்புத் தம்பி-அருமையான தம்பி-எனக்கு வாய்த்த தம்பிகளில் ஒருவர்.
அவர் கொண்டிருக்கின்ற தெய்வீக நம்பிக்கையைக் கூட – என்பால் கொண்டிருக்கின்ற மரியாதையின் காரணமாக, கொஞ்சம் மறைத்துக் கொண்டு அந்தப் பணியைத் திறம்பட ஆற்றிக் கொண்டிருப்பவர்.
ஒருநாள் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் – எதிர்க்கட்சியிலே இருந்தவர்கள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தபோது, என் பின்னால் அமர்ந்திருந்த தம்பி பெரியகருப்பனை நான் திரும்பிப் பார்த்துக் கேட்டேன்.
“எத்தனை கோயில்களில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம் என்று கணக்கு இருக்கிறதா?’’ என்று கேட்டேன். ‘இருக்கிறது’ என்று என்னிடத்திலே அவர் எடுத்துக் காட்டினார். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் தமிழகத்திலே உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுவதும், அந்த ஆலயங்களுக்குத் தேவையான – எல்லாவகையான பூஜைகளும் நடத்தப்படுவதையும் பட்டியலிட்டு என்னிடத்திலே அவர் காட்டினார்.
இதை நான் சொல்வதற்குக் காரணம் – நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இதை நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று எடுத்துக் கொள்ள மாட்டார் என்று கருதுகிறேன். அவர் குறிப்பிட்ட தமிழகத்தினுடைய அன்னாள் பிரிமியர் பனகல் அரசர் ஆட்சி புரிந்த அந்தக் காலத்திலேயே நிறுவப்பட்டதுதான் இந்த அறநிலையத் துறை.
இப்போது கூட நான் நம்முடைய மத்திய அமைச்சரிடத்திலே சொன்னேன். 1937 ஆம் ஆண்டு திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் நான் 5-ஆம் வகுப்பிலே சேர்ந்தபோது, எனக்குத் தரப்பட்ட மிக முக்கியமான பாடப் புத்தகம் – துணைப் பாடம் (நான் டீடெயில்) – பனகல் அரசரைப் பற்றியதுதான். அந்தப் புத்தகத்தை இப்போது தேடினேன். எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு? 1937-லே நான் படித்த புத்தகத்தை – திருவாரூர் பள்ளிக் கூடத்திலே தேடிப் பார்த்துக் கிடைக்காமல் – நீதிக் கட்சிக் காலத்திலே இருந்த பெரியவர்கள், மாவட்ட அதிகாரிகள் – இவர்களையெல்லாம் விசாரித்துக் கிடைக்காமல், இறுதியாக மன்னார்குடியிலே ஒரு நூல் நிலையத்திலே பனகல் அரசரைப் பற்றிய அந்தத் துணைப் பாடப் புத்தகம் எனக்குக் கிடைத்து – அதைப் படித்துப் பார்த்தேன். அதிலே இருக்கின்ற மிக முக்கியமான பக்கம்தான், தமிழ்நாட்டிலே கோயில்களில், மடாலயங்களில், அறநிலையம் என்ற பெயரால் அக்கிரமங்கள் நடைபெறுகின்றன.
அவைகளையெல்லாம் கண்காணித்து, ஆலயங்களுக்கு வருகின்ற பொருள்கள் ஒழுங்காகச் செலவிடப்படுகின்றதா? திருவிழா என்றும், தெப்ப உற்சவம் என்றும் நடத்தப்படுகின்ற விழாக்களில் செலவழிக்கப்படுகின்ற பணத்திற்கு ஒழுங்கான கணக்கு இருக்கிறதா? தினம் தினம் ஆலயத்திற்கு ஆகின்ற செலவிற்கு – ஆலயத்திலே பணியாற்றுகின்றவர்களுக்குத் தரப்படுகின்ற ஊதியங்களுக்குக் கணக்கு இருக்கிறதா என்ற இவைகளையெல்லாம் ஆராய்ந்து, அறிந்து – அதிலே சிறு ஓட்டை உடைச்சல் வராமல், ஊழல் வராமல் பார்த்துக் கொள்கின்ற அந்தப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுதான் – அந்தச் சட்டத்தின்மூலம் கிடைத்த வெற்றியாகும்.
அந்த வெற்றியினுடைய ஒரு கட்டத்தைத்தான் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்திலே நாம் அனுபவித்தோம். சிதம்பரத்திலே உள்ள அந்தக் கோயில் ஆதிக்கம், இதுவரையிலே தீட்சிதர்களுடைய கையிலேதான் இருந்தது.
அதை அறநிலையத் துறைக்கு மாற்ற வேண்டுமென்பதற்காக வழக்காடி, போராடி – அந்த வழக்கிலே நம்முடைய அரசு வழக்காடியவர்கள் பக்கம் நின்று, அதிலே வெற்றி பெற்று – சிதம்பரம் [^] கோயில் யாரோ சில பேருக்குச் சொந்தம் என்ற நிலை மாறி – இன்றைக்கு அரசுடைமையாக ஆக்கப்பட்டிருக்கிறது என்றால், இது நீதிக் கட்சி – அதனுடைய தலைவர்கள், அமைச்சர் பெரு மக்கள், பனகல் அரசர் போன்றவர்கள் ஆற்றிய பெரும் பணியின் காரணமாகத்தான் இது முடிந்தது என்பதையும் – அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த, புகழ்வாய்ந்த, மேன்மை வாய்ந்த – ஆன்மீகத்திற்கும் நாம் விரோதி அல்ல; அவர்களில் நல்லவர்கள் இருந்தால், அவர்களையும் வாழ வைக்கவேண்டும் – அவர்கள் மூலமாக அருந்தொண்டாற்ற, அறத் தொண்டுகளை ஆற்றிட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அந்த முயற்சியின் விளைவுதான் இன்றைக்கு இந்த அறநிலையத் துறை.
அந்தத் துறையில் நல்லவர்கள் அமைச்சர்களாக ஆக வேண்டும் – அந்தத் துறையில் அமைச்சர்களாக இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும். ஆன்மீகத்திற்கும் அவர்கள் அன்பர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மனிதாபிமானத்திற்கும் அவர்கள் அரும்பணி ஆற்ற வேண்டும். அப்படிப்பட்டவர் யார் என்று பார்த்தால், நமக்குக் கிடைத்தவர் – தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் – நம்முடைய பெரியகருப்பன் என்று சொன்னால் அது மிகையாகாது.
பெரியகருப்பன் பற்றி தம்பி வைரமுத்து இங்கே சொன்னபோது, அவர் மீசையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். மீசை மாத்திரமல்ல; மீசை முகத்திலே இருக்கலாம். ஆனால், அகத்திலே உள்ள ஆசை எனக்குத் தெரியும். அவருடைய அகத்திலே உள்ள ஆசை, மீசையை விடப் பெரியது.
அந்த ஆசை என்னவென்றால், தமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும்; தமிழகத்தில் இன்னும் பல திட்டங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்; தமிழகத்திலே இந்த ஆட்சி தொடர்ந்து இருந்து மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டுமென்கின்ற அந்த ஆசை பெரியகருப்பன் அவர்களுக்கு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன்.
அதனால்தான் இங்கே அவருடைய பெயரைச் சொல்லும்போது, நீங்கள் காட்டிய ஆர்வம் – அவரை அமைச்சர் என்று விளித்தபோது, காட்டப்பட்ட ஆர்வத்தைவிட – மாவட்டச் செயலாளர் என்று சொன்னபோது, அதிக ஆர்வத்தை நீங்கள் காட்டினீர்கள். எனக்குக் கூட அப்படியொரு ஆசை இருக்கிறது.
முதலமைச்சர் என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்று சொல்லுகிற நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், தலைவர் என்று சொல்வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
முதல்வர் இப்படிக் கூறியதன் மூலம் மீண்டும் முதல்வர் பதவியில் கருணாநிதி அமர மாட்டாரோ என்ற எண்ணம் வலுத்துள்ளது. ஏற்கனவே செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக அவர் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அந்த முடிவை நோக்கி முதல்வர் நகர ஆரம்பித்துள்ளாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சமீப காலமாக தொடர்ந்து தனது ஓய்வு குறித்து மறைமுகமாகவும், பூடகமாகவும் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி. மேலும் இலக்கியப் பணிகளுக்காக அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் கூறி வருகிறார்.
முதல்வர் பதவியிலிருந்து விடுபட கருணாநிதி நாட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடிப்பதால், அப்பதவியில் கருணாநிதி தொடர்ந்து வருவதாக தெரிகிறது.
கட்சியில் பெரிய பதவியை மு.க.அழகிரி எதிர்பார்ப்பதாகவும், இதுதொடர்பாக கருணாநிதியிடம் அவர் நேரடியாகவே கோரிக்கை வைத்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் [^] வெளியாகின. இந்த நிலையில், இன்று முதல்வர் இப்படிப் பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் கவலை அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தது 1969ம் ஆண்டு. அதன் பின்னர் 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திமுகவை வெற்றிக்கு இட்டுச் சென்று முதல்வரானார். 6வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று திமுகவினர் உற்சாகத்துடன் கூறி வரும் நிலையில் கருணாநிதியின் இன்றையப் பேச்சு பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply