வேலூர்: காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வரும் 25ம் தேதி காட்பாடியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இத் தகவலை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூரில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து அவர் பேசுகையில்,
வேலூரின் உள்ள சிலைகளுக்கு வரலாறு உள்ளது. தேசத்தலைவர் காந்திஜியின் திருவுருவ சிலையை அண்ணா திறந்து வைத்தார். மாநகராட்சி முன்பு அண்ணா சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். அந்த வரிசையில் நானும் இங்கு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்துள்ளேன்.
இந்த சிலையை திறந்துவைக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த வேலூர் மாநகராட்சிக்கு என் நன்றி. எந்த மதத்தையும் சாராமல் எல்லா மக்களுக்கும் பயன்படும் வகையில் திருவள்ளுவரால் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். வேலூர் இலக்கியம் கமழும் இடமாக விளங்கியுள்ளது, அது இப்போது குறைந்துள்ளது.
இதற்காக அடுத்த ஆண்டு முதல் தைத்திருநாளாம் பொங்கல் நாளில் ஒருவார காலம் வேலூரில் இலக்கிய விழாவை நான் நடத்த முடிவு செய்துள்ளேன். வேலூர் மாவட்டத்திற்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனையை போக்க மேட்டூர் அணையின் கீழ் பகுதியிலிருந்து காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தினை முதல்வர் அறிவித்துள்ளார்.
அதற்கான திட்டப் பணிகளை துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 25ம் தேதி வேலூரில் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.
Leave a Reply