ஸ்பெக்ட்ரம்’ ஊழல், எதிர்க்கட்சி பிரசாரம் தூள், தூள்

posted in: அரசியல் | 0

“கூட்டணி பலம் எப்படி இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் எவ்வளவு பலமாக இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக செயல்படுத்தியுள்ள திட்டங்கள், நம்மை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும்’ என்ற அபார நம்பிக்கையில், தி.மு.க., களம் காண தயாராகி வருகிறது.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்து, தொகுதிகளை முடிவு செய்வதற்கான முதற்கட்ட பணிகளில், பிரதான கட்சிகள் களம் இறங்கி உள்ளன.

ஆளுங்கட்சியான தி.மு.க., தன் பக்கம் அணி சேரும் கூட்டணி கட்சிகளை இரண்டாம்பட்சமாகவே கருதுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகத்தில் அமல்படுத்தியுள்ள திட்டங்கள் மற்றும் பயனாளிகள் நம்மை கரை சேர்ப்பார்கள் என்ற அபார நம்பிக்கையில் தி.மு.க.,வினர் உள்ளனர்.

கடந்த 2006ல், சட்டசபை தேர்தலில் தி.மு.க., – காங்கிரஸ் – பா.ம.க., – மார்க்சிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் கூட்டணி, ஒரு கோடியே 47 லட்சத்து 62 ஆயிரத்து 647 ஓட்டுகளைப் பெற்றன.

இதன்மூலம், அந்த கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க., கூட்டணி, ஒரு கோடியே 31 லட்சத்து 66 ஆயிரத்து 445 ஓட்டுகளைப் பெற்று 69 இடங்களை கைப்பற்றியது.

இரண்டு அணிக்கும் இடையில், 15 லட்சத்து 96 ஆயிரத்து 202 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம். இது, பதிவான ஓட்டுகளில் 5 சதவீதம். அதாவது, மொத்தம் பதிவான ஓட்டுகளில், தி.மு.க., கூட்டணிக்கு 44.75 சதவீத ஓட்டுகளும், அ.தி.மு.க., அணிக்கு, 39.91 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

கடந்த சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை, நான்கு கோடியே 66 லட்சம் பேர். இதில், மூன்று கோடியே 30 லட்சம் பேர் மட்டுமே ஓட்டுப் போட்டுள்ளனர்.

நடைபெறவுள்ள தேர்தலில், வாக்காளர் எண்ணிக்கை, நான்கு கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் பேர். வாக்காளர் எண்ணிக்கையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. கடந்த முறையைப் போல், இந்த முறையும், மூன்று கோடியே 30 லட்சம் முதல், மூன்று கோடியே 50 லட்சம் பேர் வரை மட்டுமே ஓட்டுச் சாவடிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 50 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றாலே, தனி மெஜாரிட்டியில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது ஆளுங்கட்சியின் கணக்கு. அதாவது, ஒரு கோடியே 65 லட்சம் ஓட்டுகள் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது தான் அந்த கணக்கு.

ஒவ்வொருவருக்கும், அரசின், இரண்டு, மூன்று திட்டங்களில் பலன் கிடைத்துள்ளதால், மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட, பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நான்கு கோடி வாக்காளர்களை மனதில் வைத்து, எட்டு கோடி பேருக்கு பலன் கிடைக்கும் வகையில் தி.மு.க., அரசு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால், இவை ஓட்டுகளாக மாறும் என ஆளுங்கட்சி திடமாக நம்புகிறது.

தி.மு.க.,வின் சொந்த ஓட்டு வங்கி, கூட்டணி கட்சிகள் மூலம் கிடைக்கும் ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகள் போக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மூலம், பலன் பெற்றவர்களில், 30 லட்சம் முதல் 50 லட்சம் பேர் ஓட்டுப் போட்டால், தி.மு.க., அணி அமோக வெற்றி பெற முடியும் என ஆளுங்கட்சி கருதுகிறது.

இந்த ஓட்டுகள் விழுந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆளுங்கட்சிக்கு எதிரான பிரசாரம் என, எந்த சக்தியாலும், வெற்றியை தட்டிப் பறிக்க முடியாது என கருதுகிறது. ஆனால், பதில் சொல்ல வேண்டியது தேர்தல் களம் தான்.

பலன் பெற்றவர்கள் 8 கோடி! கூட்டணி எப்படி இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்துள்ள நலத்திட்டங்கள் எதிர்பார்த்த ஓட்டுகளை பெற்றுத் தரும் என, ஆளுங்கட்சி கருதுகிறது. அதாவது, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை நிறைவேற்றியுள்ள திட்டங்களில் பலனடைந்தவர்கள் விவரம்:

திட்டம் பலன் பெற்றவர்கள்

ரூ.7,000 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி 23 லட்சம்

ஒரு ரூபாய் அரிசி திட்டம் ஒரு கோடியே 88 லட்சம்

கலர், “டிவி’ திட்டம் ஒரு கோடியே 50 லட்சம்

37 நலவாரியங்களில் உறுப்பினர்கள் 2 கோடியே 14 லட்சம்

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு கோடியே 34 லட்சம்

அரசு ஊழியர்கள் சம்பள கமிஷன் அமல் 13 லட்சம்

பென்ஷன் பெறுவோர் 6 லட்சம்

புதிதாக அரசு வேலை பெற்றவர்கள் 5 லட்சம்

பணி வரன்முறை 3 லட்சம்

முதல் தலைமுறை பட்டதாரிகள் கட்டண சலுகை 80 ஆயிரம்

தனியார் வேலைவாய்ப்பு 1 லட்சத்து 50 ஆயிரம்

திருமண உதவித் திட்டம் 3 லட்சம்

முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 22 லட்சத்து 26 ஆயிரம்

கான்கிரீட் வீடு 2 லட்சத்து 50 ஆயிரம்

இதுதவிர, 108 ஆம்புலன்ஸ், பயிர்க் காப்பீடு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல திட்டங்களில் மொத்தம் எட்டு கோடி பேருக்கு பலன் சென்றடைந்துள்ளதாக ஆளுங்கட்சி கணக்கிட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையில் திட்டங்கள் சேராத வீடுகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.,வினர் பெருமைப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *