ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கிறார் கருணாநிதி-ஜெ.

posted in: அரசியல் | 0

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூற்றை தெரிவித்து, இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்தக் கூற்று நீதிமன்ற அவமதிப்பிற்கு சமம். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய கருணாநிதி முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவின் மிக உயரிய தணிக்கை அமைப்பான இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ரூ 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது என்று மதிப்பீடு செய்து அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சினிமா டிக்கெட் விற்பனை போல 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஊழல் நடந்து இருக்கிறது என்பதை அறிந்து தான், “ராசா இன்னமும் அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. அண்மையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்ததற்குஉச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூற்றை தெரிவித்து, இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் இந்தக் கூற்று நீதிமன்ற அவமதிப்பிற்கு சமம். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய கருணாநிதி முயற்சிக்கிறார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து மக்களை ஏமாற்றும் வகையில் அபத்தமான கருத்துக்களை எல்லாம் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை ஏன் முன் தேதியிட்டு ராசா மாற்றி அமைத்தார்? ஒரு மணி நேரத்திற்குள் வரைவோலையுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்ததற்கான காரணம் என்ன? பிரதமரின் யோசனை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? சட்ட அமைச்சகத்தின் கருத்துரு ஏன் புறக்கணிக்கப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு கருணாநிதி இதுநாள் வரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைப்பதற்கான முயற்சியிலும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சியிலும் கருணாநிதி ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

எனவே, ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதியைக் கண்டித்தும், ஊழலுக்குக் காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *