ஹோட்டல் துறையும், சுற்றுலா துறையும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை.
சுற்றுலா துறையானது ஹோட்டல் துறைக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்து வருகிறது. ஹோட்டல் துறையானது ஒரு பகுதி அல்லது ஒரு நாட்டின் எல்லையோடு நின்றுவிடாமல், சர்வதேச அளவில் இணைப்புகளை வைத்து செயல்படுகிறது. எனவே இத்துறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா மற்றும் பிசினஸ் டிராவல், வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக ஹோட்டல் துறை நன்கு வளர்ச்சியடைந்து இருப்பதால், அத்துறையில் பணியாற்ற பயிற்சிபெற்ற பல நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே ஹோட்டல் மேலாண்மை படிப்புகள் பல வருடங்களாகவே அதிக முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.
ஹோட்டல் மேலாண்மை படிப்புகளை படித்தவர்களுக்கு, பலவித வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒரு ஹோட்டல் செயல்பாட்டில் எந்தமாதிரியான பணிகள், ஹோட்டல் மேலாண்மை பட்டதாரிகளுக்கு உள்ளன என்பதைப் பற்றிய ஒரு விரிவான அலசலை மேற்கொள்ளலாம்.
பொது செயல்பாடுகள்(ஜெனரல் ஆபரேஷன்ஸ்):
இந்த பொது செயல்பாட்டு துறைக்கு பொது மேலாளர் தலைமை வகிக்கிறார். இவரே அனைத்தையும் நிர்வகித்து ஒருங்கிணைக்கிறார். பணியாளர் நிர்வாகம், நிதி கட்டுப்பாடு, சேவைகளை வழங்குதல், தரக்கட்டுப்பாடு மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளை மேற்பார்வை செய்கிறார். ஒரு ஹோட்டல் எந்தளவிற்கு பெரியது என்பதை பொறுத்து, பொது மேலாளருக்கு உதவியாக துணை மேலாளர்கள் இருப்பர்.
வரவேற்பறை(பிரண்ட் ஆபிஸ்):
அனைத்து செயல்பாடுகளுக்கும் இதுதான் மையம். ஏனெனில் ஹோட்டலின் வியாபாரமே இங்கிருந்துதான் தொடங்குகிறது. விருந்தினர்களை வரவேற்பது, அறைகளுக்கான பதிவுகளை மேற்கொள்வது, தகவல் தொடர்புகளை செய்வது, கட்டண ரசீதுகளை தயார் செய்தல், வாடிக்கையாளர் சேவைகளின் கணக்குகளை பராமரித்தல் போன்ற முக்கிய பணிகள் வரவேற்பறையில் நடைபெறுகின்றன. இந்த துறையின் பணிகள் வரவேற்பறை மேலாளர் அல்லது பிரதான பராமரிப்பாளர்(ஹவுஸ்-கீப்பர்) போன்றோரால் மேற்பார்வை செய்யப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவர்களை அடுத்து இந்த பிரிவில், உதவி மேலாளர், லாபி எக்சிகியூடிவ், மேற்பார்வையாளர், தகவல் உதவியாளர், வரவேற்பாளர்(ரிசப்ஷனிஸ்ட்), பெல் கேப்டன், பெல் பாய், டோர் மேன் போன்றோர் உள்ளனர்.
பராமரிப்பு பணி:
இந்த துறையானது, அறைகள், பார்கள், ரெஸ்டாரண்டுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஹோட்டலையும் சுத்தமாக பராமரித்து, அழகாக வைத்து அதன்மூலம் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தி அவர்களை கவரும் பணியை செய்கிறது. இத்துறையில் தலைமை ஹவுஸ் கீப்பிங் நிர்வாகி, தள மேற்பார்வையாளர், அறை உதவியாளர்கள், படுக்கை விரிப்பு, போர்வை உள்ளிட்ட துணி வகைகளை கையாளும் மேற்பார்வையாளர், ஊழியர்கள் போன்றோர் உள்ளனர்.
உணவு மற்றும் பானங்கள் துறை:
ஹோட்டல் தொழிலின் முக்கிய துறைகளில் பிரதானமான துறை இதுவாகும். ஹோட்டலில் சமைக்கப்படும் மற்றும் பரிமாறப்படும் அனைத்து உணவு வகைகள் மற்றும் பானங்களுக்கு இத்துறையே பொறுப்பாகும். சமையலறை, பேக்கரி மற்றும் பார் ஆகியவை இந்த துறை சம்பந்தப்பட்ட முக்கிய இடங்கள். சமையலறையின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருப்பவர் செப் டி கியூசைன் என்றும், பிரிவு பொறுப்பாளராக இருப்பவர் செப் டி பார்டிஸ் என்றும், இத்தகைய பிரிவு பொறுப்பாளர்களை மேற்பார்வை செய்து ஒருங்கிணைப்பவர் சவுஸ்-செப் என்றும் பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகிறார்கள்.
சமைப்பவர் குக் என்று அழைக்கப்படுகிறார். உணவு அறையின்(டைனிங் ஹால்) பொறுப்பாளர் மைட்டர் டி ஹோட்டல் என்றும், உணவு அறையினுடைய ஒரு பகுதி கேப்டன் பொறுப்பாளர் செப் டி ரேஞ்ச் என்றும், உணவு பரிமாறுபவர் டெமி செப் டி ரேஞ்ச் அல்லது ஸ்டீவர்ட் என்றும் பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகிறார்கள். இவர்களைத் தவிர, ரெஸ்டாரண்டில் விருந்தினர்களை கவனித்து, அவர்களின் புகார்களை கேட்டு நடவடிக்கை எடுக்கும் ரெஸ்டாரன்ட் பணியாளர்களும் உள்ளனர். பானங்களை பரிமாறுபவர்கள் பார்டெண்டர்ஸ் எனப்படுகின்றனர்.
கணக்காளர் துறை(அக்கவுண்டிங்):
இந்த துறையானது பணப் பரிமாற்றங்கள் மற்றும் கடன் செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்கிறது. தேவையான பொருட்களை வாங்குதல், விருந்தினர்களுக்கு சேவைகளை வழங்குதல் போன்றவை உள்ளிட்ட வேறு சில விஷயங்களும் இதில் அடக்கம்.
விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறை:
இந்த துறையானது டிராவல் ஏஜெண்டுகள், டூர் ஆபரேட்டர்கள், பிற முக்கிய கார்பரேட் வாடிக்கையாளர்கள் போன்றோருடன் தொடர்பு வைத்து ஹோட்டல் வியாபாரத்தை அதிகரிக்கும் பணியை செய்கிறது. இதைத்தவிர விளம்பரம் மற்றும் பொதுமக்கள் தொடர்பு போன்றவை இந்த துறையால் வழக்கமாக செய்யப்படும் பணிகளாகும்.
பொறியியல்/பராமரிப்பு துறை:
ஹோட்டல் வளாகத்திலுள்ள கட்டிடங்கள், இயந்திரங்கள் மற்றும் முக்கிய சாதனங்களை பராமரித்து முறையாக இயக்கிட தகுதி வாய்ந்த பொறியாளர்களைக் கொண்டது இத்துறை.
பணியில் சேரும் தகுதி மற்றும் முறை:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒருவர் நேரடியாக பணியில் சேரலாம் அல்லது ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களின் மூலமும் சேரலாம். நேரடியாக சேரும் பணி வாய்ப்புகளை பற்றி செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கப்படும்.
SHANMUGAM
ஹாய் இ ரெஃஉஎஸ்த் வாண்டேது JOB