சென்னை: ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, யு.ஜி.சி., வகுத்த விதிமுறை பொருந்தாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறுபான்மை கல்லூரிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் ஒப்புதலை கோரின.
‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி., ) வகுத்த விதிமுறைகளின்படி, தேர்வுக் குழுவை அமைத்து ஆசிரியர்களை நியமிக்காததால், ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது’ என, பல்கலை தரப்பில் காரணம் கூறப்பட்டது. இதையடுத்து, ‘தேர்வுக்குழு அமைப்பது தொடர்பான யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது; எனவே இந்த விதிமுறைகள் செல்லாது’ என அறிவிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் அமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் கல்லூரிகள் சங்கம் உள்ளிட்ட 16 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதிகள் டி.முருகேசன், வி.கே.சர்மா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல்கள் என்.ஆர்.சந்திரன், சோமயாஜி, வக்கீல்கள் ஆர்.நடராஜன், ஐசக்மோகன்லால், காட்சன் சுவாமிநாத், சேவியர் அருள்ராஜ் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகினர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், வி.கே.சர்மா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை ஒழுங்குமுறை செய்து தங்கள் விருப்பப்படி ஊழியர்களை தேர்வு செய்ய, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொது நலன் நோக்கில், விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது என்கிற யு.ஜி.சி.,யின் வாதத்தை ஏற்க முடியாது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாக உரிமையில் குறுக்கிடும் வகையிலான விதிமுறைகள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதால் அவற்றுக்கு பொருந்தாது.
ஆசிரியர்கள் நியமனத்தில் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். கல்வித் தரத்தை பேணுவதற்கான சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் தேர்வில் குறுக்கிடும் உரிமையில் தான் கட்டுப்பாடு உள்ளது. ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை நிர்வாக உரிமையாக எடுக்கும் போது, யு.ஜி.சி., விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்கிற முடிவுக்கு தான் வர முடியும். மனுதாரர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.
எனவே, தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற யு.ஜி.சி., விதிமுறைகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. இந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊழியர்கள், கல்வித் தகுதி, அனுபவம் பூர்த்தி செய்திருந்தால் அதற்கு, யு.ஜி.சி., ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply