டெல்லி: 2 ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏல அடிப்படையில் தராமல், ‘முதலில் வந்தவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் கொடுத்ததால் ரூ 1,76,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தாங்கள் கணக்கிட்டது நூறு சதவீதம் சரியே.
அதில் எந்த மாறுதலும், தவறுதலும் இல்லை, என்று இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கணக்கீடு தவறு என்றும், நஷ்டமே ஏற்படவில்லை என்றும் கூறிய மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு பதிலடி தரும் வகையில் சிஏஜி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கடந்த வாரம் நிருபர்களைச் சந்திக்கையில், தலைமை கணக்கு தணிக்கையாளரின் கணக்கு முழுக்க தவறு என்றும், அரசுக்கு நஷ்டமே இல்லை, லாபம்தான் கிடைத்திருக்கிறது’ என்றும் கூறியிருந்தார்.
கபில் சிபல் கருத்து ஏற்கத்தக்கதல்ல….
2 ஜி அலைக்கற்றை இழப்பு குறித்த தங்கள் மதிப்பீடு சரியே என சிஏஜி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அரசுக்கு மேலும் ஒரு பலத்த அடி விழுந்துள்ளது உச்சநீதிமன்றத்திடமிருந்து.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து ஏற்கத்தக்கதல்ல, என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை விசாரணையின் பொது நல வழக்கு மையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கபில் சிபல் கருத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால், நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.எஸ். கங்குலி ஆகியோர் கபில் சிபல் கருத்தை நிராகரித்துவிட்டனர்.
உண்மையான இழப்பு என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.
இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத் துறை கணித்துள்ளதை பூஷண் சுட்டிக்காட்டியபோது, அதை அரசின் கணிப்பாக ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
எனவே அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Leave a Reply