சென்னை : சட்டசபையில் கவர்னர் உரையின்போது, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேர், இந்த கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டனர்.
அவர்களின் சட்டசபை உறுப்பினர் செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், அவர்களுக்கான சலுகையும் ரத்தாகியுள்ளது.
தமிழக சட்டசபை நேற்று காலை துவங்கியவுடன், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஆவுடையப்பன் கூறியதாவது: சட்டசபையில் கவர்னர் உரையாற்றிய போது, சட்டசபை விதி மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் விதமாக, அ.தி.மு.க., – கம்யூனிஸ்ட் – ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் இருந்தன. சபை மரபையும், கண்ணியத்தையும் மீறும்படியாக அவர்களது செயல்பாடு இருந்ததால், அவர்களை வெளியேறுமாறு கூறினேன். அவர்கள் வெளியேறாத நிலையில், வெளியேற்றும்படி, சபைக் காவலர்களுக்கு உத்தரவிட்டேன்.அதன்படி, கடமையில் ஈடுபட்ட காவலர்களை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தாக்க முற்பட்டு, கூச்சலிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சி ஜெயராமன், என்னிடம் ஒரு புகார் கொடுத்தார். அவர் சொன்ன புகாரில் எவ்வித உண்மையும் இல்லை என அறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, சபை முன்னவர் ஒரு தீர்மானம் கொண்டு வருவார்.
நிதியமைச்சர் அன்பழகன்: கடந்த 7ம் தேதி, கவர்னர் உரையின்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அவரது உரைக்கு குறுக்கீடு செய்தனர். பிரச்னைக்குரியவர்களை வெளியேற்ற வந்த காவலர்களை தாக்கினர். பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு காவலரை அடிக்க முயன்றார். காவலர் ஒருவரின் தொப்பியும் கீழே விழுந்தது.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜெயக்குமார், வேலுமணி, அரி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், செந்தில்பாலாஜி, பாண்டுரங்கன் ஆகியோர், சபையின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், காய்கறிகளை தட்டில் ஏந்தியும், மாலைகளாக அணிந்தும் சபைக்குள் வந்தனர். சபையில் அவற்றை வீசி எறிந்தனர்.கவர்னர் உரையின் நகலை சி.வி.சண்முகம் கிழித்து வீசினார். இந்த செயல், இவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இந்த காலத்தில் இவர்களுடைய சட்டசபை உறுப்பினர் செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சபையில் முன்மொழிகிறேன்.
இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சஸ்பெண்டுக்குள்ளான ஒன்பது எம்.எல்.ஏ.,க்களையும் வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அவர்கள் வெளியேறாததால், சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., – கம்யூனிஸ்ட் – ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.கேள்வி நேரம் முடிந்ததும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தவிர மீதமுள்ளவர்களும், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் சபை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது நடந்த விவாதம்:
செங்கோட்டையன் – அ.தி.மு.க: சட்டசபையில் கவர்னர் உரையாற்றும் போது, எங்களை, சபாநாயகர் வெளியேற்ற முடியாது. கர்நாடகாவில், கவர்னர் உரையின் போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களை அந்த சபாநாயகர் வெளியேற்றவில்லை. மாறாக, கவர்னர் உரையாற்றாமல் சென்று விட்டார். அங்கு ஒரு சட்டம், இங்கு ஒரு சட்டம் இருக்கிறதா? எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அன்பழகன் – நிதியமைச்சர்: இந்த சபையில் எடுக்கும் முடிவு, இந்த சபையைக் கட்டுப்படுத்தும். வேறு சட்டசபைக்கு வழிகாட்டுதல் ஆகாது. சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது சபையை கட்டுப்படுத்தக் கூடியது. எனவே, இதைப்பற்றி பேச அனுமதிக்கக் கூடாது.சபாநாயகர் ஆவுடையப்பன்: உங்களது கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். எம்.எல்.ஏ.,க்கள் மீதான நீக்கத்தை மறுபரிசீலனை செய்யாததைக் கண்டித்து, அ.தி.மு.க., – கம்யூனிஸ்ட் – ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்து, வெளியில் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் சட்டசபை உறுப்பினர் செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கான சலுகையும் ரத்தாகியுள்ளது. சஸ்பெண்ட் காலத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்குரிய எந்த சலுகையையும் இவர்கள் அனுபவிக்க முடியாது.
Leave a Reply