இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு புகழ்பெற்ற ஒன்றாக ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் விளங்குகிறது.
தோற்றம்:
இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான ஜி.டி.பிர்லா, சென்னையிலுள்ள எம்.ஐ.டி. -இல் சேர்ந்து படிக்கையில், அந்நிறுவனத்தின் கல்விமுறையின்பால் மிகவும் கவரப்பட்டு, அதையே முன்மாதிரியாக கொண்டு, கல்வி நிறுவனங்களை துவங்க எண்ணினார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தனது சொந்த ஊரான பிலானியில், பிர்லா அறிவியல் கல்லூரி, பிர்லா கலை மற்றும் மானுடவியல் கல்லூரி மற்றும் பிர்லா பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். இந்த 3 கல்வி நிறுவனங்களும் பிற்காலத்தில் இணைந்து, நாட்டிலேயே முதல் சுயநிதி வகையிலான நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது.
கல்விமுறை:
தனது கல்வி நிறுவனத்திற்கு, போர்டு பவுண்டேஷன் உதவியின் மூலம் அமெரிக்காவிலிருந்து சில பேராசிரியர்களை வரவழைத்து, பிட்ஸ் ஆசிரியர்களுக்கு, அமெரிக்க கல்விமுறைப் பற்றி பயிற்சியளிக்க செய்தார் ஜி.டி.பிர்லா. பிட்ஸ் -இல் உள்ள கல்வியானது, மதிப்பெண் முறையில் இல்லாமல், தொடர்ச்சியான மதிப்பீடு, ஒட்டுமொத்த அக மதிப்பீடு, செமஸ்டர் முறை மற்றும் லெட்டர் கிரேடிங் போன்ற நிலைகளில் உள்ளது.
இக்கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பு புகழ்பெற்றதாக இருந்தாலும், எம்.எஸ்சி.(ஹானர்ஸ்) மற்றும் எம்.எஸ்சி.(டெக்) போன்ற படிப்புகளும் பிரபலம். இந்த படிப்புகளில் 8 செமஸ்டர்கள் உள்ளன மற்றும் 2005 ஆம் ஆண்டு முதல் இதற்கான மாணவர் சேர்க்கையானது ஆன்லைனில் நடைபெறுகிறது. இடம் கிடைப்பது மிகவும் கடினம். பயிற்சிக்கு உயர்ந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் படிப்பின்போதான தொழிற்சாலை பயிற்சியானது, வெளியிலிருந்து வரும் ஆசிரியரின் மேற்பார்வையின்கீழ் வழங்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தில், முழு நேரமும் பல்கலை வளாகத்திலேயே தங்கி, மாணவர்களின் தொழில் பயிற்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட 50 ஆசிரியர்கள் உள்ளனர்.
பிட்ஸ் -இல் கடந்த 1979 ஆம் ஆண்டு பயிற்சி பள்ளி(ப்ராக்டிஸ் ஸ்கூல்) அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, இன்று நாட்டில் புகழ்பெற்று விளங்குகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாணவரும் தங்களின் பாடத்திட்டத்துடன், தொழிற்சாலை அனுபவத்தையும் சேர்த்து பெறுகின்றனர். இந்த முறையில், ஒவ்வொரு மாணவரும் பட்டம் பெறுவதற்கு முன்பாக 7 மாதம் மற்றும் 15 நாட்கள் தொழிற்சாலையில் செலவிடுகின்றனர். முதல் இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு, கோடை விடுமுறையில் 2 மாத பயிற்சியும், இறுதி வருடத்தில் 5.5 மாத பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இத்தகைய வழிமுறைகளின் மூலம், ஒரு மாணவர் பட்டம் பெறுவதற்கு முன்னரே வேலை உலகில் பயிற்சி பெறுகிறார். இந்த முறையானது பல்கலை மற்றும் தொழிற்சாலைகளுக்கு வெற்றிகரமான ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்த திட்டத்தில் 150 தொழிற்சாலைகள் பங்கு பெறுகின்றன மற்றும் பிட்ஸ் மாணவர்கள் 2000 பேரை அவை பயிற்சிக்கு எடுத்துக்கொள்கின்றன.
ஆராய்ச்சி:
ஆராய்ச்சி பணி என்பது இக்கல்வி நிறுவனத்தில் ஒரு உள்ளார்ந்த பணியாகும். ஆராய்ச்சி நடவடிக்கையில் நாட்டிலேயே நான்காவது இடத்தைப் பெறுகிறது. தீவிரமாக நடைபெறும் பிஎச்.டி. ஆராய்ச்சிகள் இதற்கு துணைபுரிகின்றன. 22 அரசு துறைகள், 11 வெளிநாட்டு கூட்டாளர்கள் ஆகியோருடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடக்கம் முதல் இப்போதுவரை, பல்கலை-தொழிற்சாலை ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகம்:
தூசு படிந்த பிலானியில், பிட்ஸ் வளாகமானது ஒரு தூய்மையான மற்றும் அழகான ஒன்றாக திகழ்கிறது. இந்த வளாகத்தில் அழகான சரஸ்வதி கோயில் உள்ளது. மியூசியம், நவீன &’மாணவர் நடவடிக்கை மையம்&’, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், ஜிம்னாசியம் பயிற்சி வளாகங்கள் உள்பட ஜூடோ மற்றும் கராத்தே போன்றவற்றை கற்கும் வசதிகளும் உள்ளன.
மாணவர்கள் மகிழ்ச்சியாகவும், ஓய்வாகவும் அமர்ந்து கலந்துரையாடுவதற்கு ஒரு அழகிய திறந்தவெளி புல்தரை உள்ளது. இந்த வளாகத்தில் சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மோட்டார் வாகன பயன்பாடு குறைவாகவும், சைக்கிள் பயன்பாடு அதிகமாகவும் இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
சிறப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி:
பிட்ஸ் வளாகம் அறிவுத்திறனுக்கான ஒரு தீவாக விளங்குகிறது. பல மாணவர்கள் இது ஒரு நல்ல கல்வி நிறுவனம் என்று பாராட்டுகிறார்கள். நாட்டின் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேறு சில விஷயங்களுக்காக தங்கள் பெயரை கெடுத்துக்கொண்டுள்ள நிலையில், பிட்ஸ் தனது கல்வி தரத்தில் அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக, இப்பல்கலையை விரிவுபடுத்தும் பணிகளில் கவனம் செலுத்தப்படுகின்றன. ஐதராபாத் மற்றும் டெல்லியில் வளாகங்கள் இருப்பதோடு, கூட்டு முயற்சியில் துபாயிலும் ஒரு வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply