அதிகாரிகள் அலட்சியம்: ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் மாணவர்கள்

posted in: மற்றவை | 0

சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனால், நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர், மதிய உணவு கிடைக்காமல், பசியுடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.

சென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 697 மாணவர்கள், 749 மாணவியர் என, 1,446 பேர், கல்வி பயில்கின்றனர். சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட, பல கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்களின் மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளி, 2005ம் ஆண்டு வரை, நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், பின், வெளியில் சென்று படிக்க முடியாததால், மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் அவர்கள் கல்வி தடைபட்டது. இது குறித்து, “தினமலர்’ நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது. அதன் பலனாக, அப்பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து கிடைத்தது. இதனால், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்தது. மேலும், பள்ளி ஆசிரியர்களின் திறமையால், அப்பள்ளியின் தேர்ச்சி சதவீதமும் உயர்ந்தது.

கடந்தாண்டு, 10ம் வகுப்புத் தேர்வில், இப்பள்ளி, 98 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர், கூலித் தொழில் மற்றும் விவசாயம் பார்த்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பலர், மதிய உணவு சாப்பிடாமல், பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் உள்ளது. மதிய உணவு உண்ணாததால், பலர், வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

பாதிக்கப்படும் மாணவ, மாணவியர் கூறுகையில், “எங்களின் பெற்றோர், கூலித் தொழில் பார்த்து வருகின்றனர். அதனால், பெரும்பாலான நாட்கள், மதிய உணவு எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், நாங்கள், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியுள்ளது. “இதனால், ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம். அந்நேரம் எங்கள் வீட்டில் உணவு தயாராக இருக்காது. மதிய இடைவேளையின் போது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வரவும் நேரம் இருக்காது. “இதனால், சக மாணவ, மாணவியர் கொண்டு வரும் உணவை பகிர்ந்துக் கொள்வோம். எங்களுக்கு மதிய உணவு அளித்தால், நாங்கள் படிக்க உதவியாக இருக்கும்’ என்றனர். பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலானோர் மதிய உணவு சாப்பிட விரும்புகின்றனர். அவர்களிடம் கையெழுத்து வாங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம்.

“பள்ளியிலேயே சத்துணவு தயாரிக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் நிதியில், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுக்கூடம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சத்துணவிற்கான அனுமதி கிடைக்கவில்லை. “இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிய உணவு கிடைத்தால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்’ என்றனர். மேடவாக்கம் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரின் பசி உணர்வுகளை புரிந்து கொண்டு கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் உடனடி நடவடிக்கை எடுத்தால், பசியின் கொடுமையில் இருந்து மாணவர்களுக்கு விமோசனம் பிறக்கும்.

கையேந்தும் கொடுமை: மேடவாக்கத்தில் உள்ள யாகவா முனிவர் வீட்டில், ஒவ்வொரு வியாழக் கிழமையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு கையேந்தி, மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதேபோல், பள்ளியிலிருந்து 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் வாங்கி உண்டு, மாணவர்கள் தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றனர். மாணவர்களை, ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் கொடுமையில் இருந்து மீட்க, கல்வித் துறையின் கண் திறக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *