அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்: இந்தியா –

posted in: கல்வி | 0

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை அநீதியாக சுரண்டுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்ததாக இந்தியா கூறியுள்ளது.

அமெரிக்காவின் டிரை-வேலி பல்கலை சம்பந்தமாக இந்திய மாணவர்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து மக்களவையில் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்தார். ஆனால் இந்த சம்பவம், உயர்கல்வி துறையில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இருக்கும் நல்லுறவை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக மேலும் அவர் கூறியதாவது, “ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக விண்ணப்பிக்கும் முன்பு இந்திய மாணவர்கள் அவற்றைப் பற்றி நன்கு விசாரித்து ஆய்வுசெய்ய வேண்டும்.

சட்டவிரோதமான விஷயங்களை விசாரித்து தண்டிக்க அனைத்து நாட்டு அரசாங்கங்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் ட்ரை-வேலி விஷயத்தில் மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள். இதை கருத்தில் கொண்டு, அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற போதிய அவகாசம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் விரும்பினால் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்.

குடியேற்ற விதி மீறல் மற்றும் இதர முறைகேடுகளுக்காக கடந்த மாதம் ட்ரை-வேலி பல்கலையை அமெரிக்க அரசு மூடியது. ஆனால் அந்த பல்கலை, அரசு அங்கீகாரம் பெறாமலேயே குறைந்த எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ள 2009, பிப்ரவரியில் அனுமதி பெற்றது. அங்கே 1500 இந்திய மாணவர்கள் படித்தனர். அதன்பிறகு நடந்த சம்பவம் நாமெல்லாம் அறிந்ததே.

இந்திய மாணவர்களின் கணுக்காலில் ரேடியோ கண்காணிப்பு கருவி கட்டப்பட்டதை இந்தியா கடுமையாக எதிர்த்ததை தொடர்ந்து அதை அகற்றும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கம், இந்திய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது விஷயமாக நான் தனிப்பட்ட முறையில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் பேசியுள்ளேன். மேலும் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், தனது அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க அதிகாரிகளிடம் இந்தியாவின் கவலையை தெரிவித்துள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *