அரசியல் அறிவியல்(பொலிடிகல் சயின்ஸ்) படிப்பானது, அதிகளவிலான மாணவர்களால் விரும்பி படிக்கப்படுகிறது.
ஏனெனில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத இந்த பாடம் பேருதவி புரிவதும், இதை விரும்புவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த பாடத்தை சிறப்பான முறையில் படிக்க, இந்தியா முழுவதும் பல புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் உள்ளன. அத்தகைய கல்வி நிறுவனங்களைப் பற்றி இங்கே காணலாம்.
அரசியல் அறிவியல் படிப்பிற்கு, இந்திய அளவில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முக்கியமானதாகும். பேராசிரியர்களின் தகுதி, தரம் மற்றும் இதர வசதிகள் இந்த பல்கலையை அனைவரும் விரும்பும் ஒன்றாக ஆக்கியுள்ளன. இந்த பல்கலை, இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் மாணவர்களை கவரும் ஒன்றாகவும் உள்ளது. இதைத்தவிர ஆந்திர தலைநகரிலுள்ள ஐதராபாத் பல்கலைக்கழகமும் அரசியல் அறிவியல் படிப்பிற்கு புகழ்பெற்று விளங்குகிறது. டெல்லியை சேர்ந்த மாணவர்கள் முதற்கொண்டு இந்த பல்கலையை விரும்புகின்றனர்.
மேலும் சர்வதேச பார்வை மற்றும் அறிவு கொண்ட சிறந்த பல பேராசிரியர்களைப் பெற்றுள்ளதால், டெல்லி பல்கலையும் இப்படிப்பிற்கு உகந்த ஒன்றாக விளங்குகிறது. இதைத்தவிர தனது துடிப்பான நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சிகளால், கல்கத்தா பல்கலையும், அரசியல் அறிவியல் படிப்பில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது.
புனே பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் இருப்பிடம்தான் அதற்கு மிகப்பெரிய அனுகூலம். மராட்டிய மாநிலத்தின் கலாச்சார தலைநகராக விளங்கும் புனே, இயல்பாகவே மாணவர்களை ஈர்க்கும் ஒரு இடம். அந்த வகையில் அரசியல் அறிவியல் படிப்பிற்கும் சிறந்த இடமாக புனே பல்கலை திகழ்கிறது. இதைத்தவிர பஞ்சாப் பல்கலை மற்றும் பனாரஸ் பல்கலையும் இப்படிப்பிற்கு புகழ்பெற்று விளங்குகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
இவைத்தவிர ஒரிசா மாநிலத்திலுள்ள ரவேன்ஷா பல்கலை மற்றும் உத்கல் பல்கலை போன்றவை அரசியல் அறிவியல் படிப்பிற்கு ஓரளவிற்கு சிறந்த மையங்களாக திகழ்கின்றன. மேலும் லக்னோவிலுள்ள அம்பேத்கர் பல்கலை, அரசியல் அறிவியல் படிப்பிற்கு பெயர்பெற்ற புதிய கல்வி மையமாக விளங்குகிறது.
Leave a Reply